Published : 18 Dec 2020 01:42 PM
Last Updated : 18 Dec 2020 01:42 PM
திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், மேற்கு வங்கத்துக்கு இருநாட்கள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு வருகிறார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பல மூத்தத் தலைவர்கள் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் நாளை இணைகின்றனர்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்கத்துக்கு கடந்த வாரம் வந்தபோது அவரின் பாதுகாப்புவாகனம் தாக்கப்பட்டபின் பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.
மேற்கு வங்க தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபிக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அவர்களை டெல்லிக்கு அனுப்ப முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். இதையடுத்து நட்டாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் இருந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளையும் மத்தியப் பணிக்கு மாற்றி மத்திய உள்துறை உத்தரவிட்டது.
ஆனால், அந்த அதிகாரிகள் மூவரையும் இன்னும் மாநிலப் பணியிலிருந்து விடுவிக்காமல் மேற்கு வங்க அரசு வைத்துள்ளது. இதை நினைவூட்டி மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று மேற்கு வங்க அரசுக்குக் கடிதம் எழுதியபின்பும் மம்தா அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேபினட் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி திரிணமூல் கட்சியிலிருந்து விலகினார். கொல்கத்தாவுக்கு அமித் ஷா வந்தபின் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் பாஜகவில் இணையக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் சில்பேந்திர தத்தா, ஜிதேந்திர திவாரி இருவரும் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களைத் தவிர பல முக்கியத் தலைவர்களும் பாஜகவில் அமித் ஷா முன்னிலையில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தாவுக்கு இன்று இரவு வரும் அமித் ஷா நியூடவுன் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். அதன்பின் நாளை காலை தேசிய புலனாய்வு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் அமித் ஷா அதன்பின் கொல்கத்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்.
அதன்பின் மிட்னாப்பூர் செல்லும் அமித் ஷா, புரட்சியாளர் குதிராம் போஸுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இரு கோயில்களில் தரிசனம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்துக்கு இடையே விவசாயி ஒருவரின் இல்லத்தில் அமித் ஷா மதிய உணவு சாப்பிட உள்ளார், அதைத் தொடர்ந்து மிட்னாப்பூரில் பேரணியும் பாஜக சார்பில் நடைபெற உள்ளது.
இந்தப் பேரணியில் ஏராளமான திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கக்கூடும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பின் கொல்கத்தாவுக்கு திரும்பும் அமித் ஷா, கட்சியின் மூத்த தலைவர்களுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்துக்கு அமித் ஷா செல்கிறார். அதன்பின் போல்பூரில் நடக்கும் பேரணியில் பங்கேற்கும் அமித் ஷா, பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிட்டு டெல்லி புறப்பட உள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடியும் வரை ஒவ்வொரு மாதமும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரும் வருகை தருவார்கள் என மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...