Published : 18 Dec 2020 12:06 PM
Last Updated : 18 Dec 2020 12:06 PM
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அதிருப்தி தலைவர்கள் ஆகியோரை கடந்த மார்ச் மாதத்துக்குப்பின் டெல்லியில் உள்ள 10,ஜன்பத் இல்லத்தில் முதல்முறையாக நாளையும், நாளை மறுநாளும் சந்தித்து சோனியா காந்தி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி முழுநேரத் தலைவர் தேவை, ஆக்கப்பூர்வமான தலைவர் தேவை எனக் கூறி தங்களின் அதிருப்தியைத் தெரிவித்த 23 மூத்தத் தலைவர்கள் பலரையும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி சந்திக்க உள்ளார்.
2021-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தை நடத்தாமல் இருப்பது, விவசாயிகள் போராட்டம் ஆகியவை குறித்து சோனிய காந்தி மூத்தத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் வந்தபின், காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த அனைத்துக் கூட்டங்களும், காணொலி மூலமே நடந்து வந்தன. ஆனால், கடந்த மார்ச் மாதத்துக்குப்பின் முதல்முறையாக முக்கியத் தலைவர்கள் அனைவரையும் சோனியா காந்தி நேரடியாகச் சந்திக்க உள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு அதிருப்தி தலைவர்களான மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் உள்ளிட்டோரும் சோனியா காந்தியைச் சந்திக்க உள்ளனர்.
இவர்கள் தவிர முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோரும் சோனியா காந்தியைச் சந்திக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் எந்தெந்தக் கட்சியுடன் கூட்டணி பேச்சு நடத்தலாம், கூட்டணியை உறுதி செய்யலாம் என்பது குறித்து சோனியா காந்தியுடன் மூத்தத் தலைவர்கள் ஆலோசிப்பார்கள் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடர்ந்து வருகிறது. வரும் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடன், காங்கிரஸ்கட்சி கூட்டணி வைப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அதுகுறித்து பேசப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் ஏற்கெனவே ராகுல் காந்தி சிறிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அந்த அறிக்கையை தலைவர் சோனியா காந்திக்கு வழங்கியுள்ளார்
மேலும், இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, பல்வேறு மாநிலங்களில் நடந்த 58 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் கட்சியின் செயலாபடு, ராஜஸ்தான், ஹைதராபாத், கேரளா, அசாமில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படலாம்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம், குளிகாலக் கூட்டத்தொடர் ரத்து ஆகியவை குறித்தும் சோனியா காந்தி, மூத்த தலைவர்களுடன் ஆலோசிப்பார்.
அதுமட்டுமல்லாமல், 2021 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காங்கிரஸ்க ட்சிக்குள் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தல் குறித்தும் சோனியா காந்தி ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT