Published : 18 Dec 2020 03:16 AM
Last Updated : 18 Dec 2020 03:16 AM

அமராவதி தலைநகராக நீடிக்க வலியுறுத்தல் நிலம் வழங்கிய விவசாயிகளின் போராட்டம் 365 நாட்களை எட்டியது

அமராவதி

ஆந்திராவின் தலைநகராக அமராவதியே நீடிக்க வலியுறுத்தி, அதற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 365 நாட்களை எட்டி உள்ளது.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது, மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு செய்யப்பட்டது. விஜயவாடா-குண்டூர் இடையே, கிருஷ்ணா நதிக்கரையோரம் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஜப்பான், சிங்கப்பூர் அரசுகளின் ஒத்துழைப்போடு அமராவதி நகரை உருவாக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றதும் அமராவதி திட்டத்தை மாற்றி அமைக்க தீர்மானித்தார். அதாவது, ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் இருந்தால் மாநிலம் முழுவதும் ஒரே சீராக வளர்ச்சி பெறும் என கருதினார். இதன்படி, அமராவதியில் சட்டப்பேரவையும் விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் கர்னூலில் உயர் நீதிமன்றமும் அமைப்பது தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அமராவதிக்கு தங்களது நிலத்தை வழங்கிய நூற்றுக்கணக்கான விவசாய குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா வைரஸ் பரவினாலும் இவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இதற்காக 110 பேர் தற்கொலை செய்துகொண்டனர். ஆனாலும் ஜெகன் அரசு 3 தலைநகரங்கள் கொள்கையில் உறுதியாக உள்ளது.

இவர்களின் போராட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாஜக, ஜனசேனா, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடங்கி 365 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, சந்திரபாபு நாயுடு தலைமயில், 'அமராவதி பாதுகாப்பு போராட்டம்’ எனும் பெயரில் அமராவதியில் உள்ள ராயபூடியில் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், பாஜக, ஜனசேனா, கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். ஆனால், இந்தக் கூட்டத்துக்கு புறப்பட்ட பலரை அந்தந்த ஊர்களிலேயே போலீஸார் கைது செய்தனர். பலரை வீட்டுக்காவலில் வைத்து, மாலையில் சொந்த ஜாமீனில் அனுப்பி வைத்தனர். இதில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்தார். முன்னதாக அமராவதிக்கு அடிக்கல் நடப்பட்ட இடத்தைப் பார்வையிட்டு அங்குள்ள புனித மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x