Published : 17 Dec 2020 08:17 PM
Last Updated : 17 Dec 2020 08:17 PM
பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்றக் கூட்டத்தில் என்னைச் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கவில்லை, என் கருத்துகளைக் கூற முடியவில்லை. இதில் நீங்கள் தலையிட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் பாஜக எம்.பி. ஜூவல் ஓரம் தலைமையில் நேற்று நடந்தது. தரைப்படை, கப்பற்படை, விமானப்படையின் சீருடைகளை மாற்றி, புதிய சீருடை வழங்குவது குறித்து ஆலோசனை தொடங்கியது.
அப்போது ராகுல் காந்தி எழுந்து தேசப் பாதுகாப்பு, ராணுவத்தை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்துப் பேசாமல் சீருடை குறித்துப் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேச ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சத்சவ், ரேவந்த் ரெட்டி இருவரும் ராகுல் காந்தியுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சுதந்திரமாகப் பேசுவதை மக்களவைத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தின் காப்பாளராக இருக்கும் சபாநாயகர், பாதுகாப்புத் துறைக்கான குழுக் கூட்டம் நடக்கும்போது ஆலோசனைகள், விவாதங்கள் நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
ஆனால், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று நான் பேச முற்பட்டபோது எனக்குக் குழுத் தலைவர் ஜூவல் ஓரம் அனுமதிக்கவில்லை. சீன ராணுவத்தின் அத்துமீறல், லடாக் எல்லை நிலவரத்தை அறிய நான் பேச எழுந்தபோது எனக்கு அனுமதியளிக்கவில்லை.
குழு நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகிச் செல்லும்போது அதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது உறுப்பினரின் உரிமை. ஓர் உறுப்பினர் அதிருப்தி தெரிவித்தாலும் அதை ஏற்க வேண்டும். ஆனால், உண்மை நிலவரம், குழுவின் தலைவர் என்னைப் பேசக்கூட அனுமதிக்கவில்லை என்பது வருந்தக்கூடியது. இப்படித்தான் ராணுவ விவரங்களை மத்திய அரசு கையாள்கிறதா?
மக்களவை சபாநாயகர்தான் அவையின் பாதுகாவலர். இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பாதுகாப்புக் குழுவில் விவாதங்களும், ஆலோசனைகளையும், உறுப்பினர்கள் பேசவும் நடவடிக்கை எடுப்பதையும் குழுவின் நோக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT