Published : 17 Dec 2020 12:40 PM
Last Updated : 17 Dec 2020 12:40 PM
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையில் நடைபெற இருப்பதால், அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் முக்கிய அதிகாரிகள் அடுத்தவாரம் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்துக்குச் சென்று தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த உள்ளனர்.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சட்டப்பேரவைக் காலம் அடுத்த ஆண்டு ஜுன் மாதத்துக்குள் முடிகிறது. இதையடுத்து, இந்த 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் ஜூன் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களுமே அரசியல் வட்டாரங்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மூன்றாவது முறையாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக்க போராடி வருகிறது.
ஆனால், மேற்கு வங்கத்தில் கால் பதித்து மக்களவைத் தேர்தலில் 18 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கி காய்களை நகர்த்தி வருகிறது. இதனால் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே இப்போது இருந்தே அறிக்கைப் போர், காட்டமான விமர்சனங்கள் என தேர்தல் ஜூரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதில், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் தனியாக கூட்டணி பேச்சு நடத்தி வருகின்றன.
அதேபோல, கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றதால், 2-வது முறையாக இடதுசாரிகள் ஆட்சியைப் பிடிப்பார்களா என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆளும் அஇஅதிமுக, எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில் இந்த முறை பாஜகவும் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் புதிதாக கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளதால் தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக மற்றும் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கும்.
இந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் தேசிய அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதால், தேர்தல் உற்று நோக்கப்படுகிறது. இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.
தமிழகத்துக்கு அடுத்த வாரம் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா சென்று தேர்தல் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதேபோல, மேற்கு வங்க மாநிலத்துக்கு தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் சுதிப் ஜெயின் சென்று தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT