Published : 17 Dec 2020 07:18 AM
Last Updated : 17 Dec 2020 07:18 AM
அரசும், விவசாயிகளும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதால், விவசாயிகள் எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான, நியாயமான தீர்வு ஏற்படும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் உள்ள சுவர்ண பாரத் அறக்கட்டளையில் ரைத்து நேஸ்தம், முப்பாவரப்பு ஃபவுண்டேசன் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய நாயுடு, போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கு மத்திய அரசின் பிரதிநிதிகள் அளித்த பதில் குறித்த ஊடக செய்திகளைக் குறிப்பிட்டு, தீர்வுக்கான சாத்தியங்கள் இருப்பதாகக் கூறினார்.
இரு தரப்பும் ஒருவரை மற்றவர் புரிந்துகொண்டு தீர்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவ்வாறு செய்யும் பட்சத்தில், இரு தரப்புக்கும் சாதகமான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாக அது அமையும் என்றும் குடியரசு துணைத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வேளாண் பொருட்களின் கட்டுப்பாடுகள் இல்லாத சந்தைப்படுத்துதல் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்ததாகவும், இது குறித்து அவரே நிறைய தடவை பேசியுள்ளதாகவும் நாயுடு கூறினார். ‘ஒரே நாடு, ஒரே உணவு மண்டலம்’ என்பது நீண்ட கால கோரிக்கையாகும் என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகக் கூறிய குடியரசு துணைத் தலைவர், விவசாயிகளின் கருணையை தாயின் கருணையோடு ஒப்பிட்டார். எனவே, விவசாயிகளுக்கு ஆதரவளிப்பது அனைவரின் கடமையாகும் என்று அவர் தெரிவித்தார்.
பெருந்தொற்றின் போது விவசாயிகள் நாட்டுக்கு மிகப்பெரிய சேவையாற்றியதாகக் கூறிய அவர், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக அரசைப் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT