Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

கருணை அடிப்படையில் வேலை; திருமணமான மகளுக்கும் உரிமை: பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு என்று பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த தலைமைக் காவலர் கஷ்மீர் சிங் கடந்த 2008-ம் ஆண்டு பணியில் இருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, கருணை அடிப்படையில் தங்களது ஒரே மகளானஅமர்ஜித்துக்கு குமாஸ்தா அல்லது கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணி வழங்கக்கோரி கஷ்மீர் சிங்கின் மனைவி ஜஸ்பிர் கவுர் போலீஸ் துறையில் மனு அளித்தார். ஆனால், அமர்ஜித் ஏற்கெனவே திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் அவருக்கு வேலை வழங்க சட்டத்தில் இடம் இல்லை எனக் கூறி அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் அமர்ஜித் மனு தாக்கல் செய்தார். அதில், "கஷ்மீர் சிங்கின் ஒரே மகள் நான். எனக்கு திருமணம் ஆனாலும் எனது கணவர், குழந்தைகளுடன் தாய்வழி வீட்டில்தான் இருக்கிறேன். எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. எனவே எனக்கு வேலை வழங்க உத்தரவிட வேண்டும்" என அவர் கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

பணியில் இருப்பவர் உயிரிழந்தால் அவரை நம்பி இருக்கும்குடும்பத்தினருக்கு உதவுவதற்காகத்தான் கருணை அடிப்படையில் வேலை வழங்க சட்டம் வகை செய்கிறது. மகனுக்கு திருமணம் ஆகியிருந்தாலும்கூட அவருக்கு பணி வழங்கப்படுகிறது. ஆனால், மகளுக்கு திருமணம் ஆனால் மட்டும் பணி மறுக்கப்படுவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள பாலின சமத்துவத்துக்கு எதிரானதாகும். திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு. எனவே, ஒரு மாதத்துக்குள் அமர்ஜித்துக்கு போலீஸ் துறையில் வேலை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x