Published : 16 Dec 2020 03:53 PM
Last Updated : 16 Dec 2020 03:53 PM
திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களை பாஜக கட்டாயப்படுத்தி, தங்கள் கட்சியில் சேர்க்க முயன்று வருவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் பாஜக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளுக்காக அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜகவின் தேசியத் தலைவர்கள் பலரும் மாநிலத்திற்கு அவ்வப்போது வருகை தருகின்றனர். இப்பின்னணியில் பல்வேறு திரிணமூல் கட்சித் தலைவர்களும் பாஜகவில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சூழலில் சமீபகாலமாக திரிணமூல் காங்கிரஸின் பல மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கட்சித் தலைமைக்கும், மாநில அரசுக்கும் எதிராக வெளிப்படையாகப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. திரிணமூல் காங்கிரஸில் நாளுக்கு நாள் அதிருப்தி நிலவி வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்கத்தின் கூச்பிஹார் நகரில் இன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:
''திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருபவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகளாக உருவாகியிருப்பவர்கள்தான்.
டி.எம்.சி தலைவர்களைத் தங்கள் கட்சியில் கட்டாயப்படுத்தி சேர்க்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டுவருகிறது.
பாஜக தலைவர்களின் துணிச்சலைக் கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் நமது மாநிலத் தலைவர் சுப்ரதா பக்ஷியை அழைத்துக் கட்சியில் சேரச் சொல்கிறார்கள். திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் பணியாற்றி வருபவர்களே நமது உண்மையான சொத்துகள்.
பாஜகவுக்கு அரசியல் நாகரிகம், சித்தாந்தம் எதுவும் இல்லை. மேலும், ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பவாதிகள் மட்டுமே வேலை செய்கிறார்கள் அவர்களின் நலனுக்காக.
எதிர்க்கட்சிகளை உடைக்க பாஜக பணப்பைகளைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் நிச்சயம் அவர்களைப் போராடித் தோற்கடிப்போம்".
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT