Published : 16 Dec 2020 12:10 PM
Last Updated : 16 Dec 2020 12:10 PM
கேரள உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளும் இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கொச்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.
கேரளாவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த 8-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி மாவட்டங்களிலும், 10-ந் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், 14-ந் தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 8-ந் தேதி நடந்த முதற்கட்ட தேர்தலில் 73.1 சதவீதமும், 10-ந் தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 76.78 சதவீதமும், 14-ந் தேதி நடந்த 3-வது கட்ட தேர்தலில் 76.4 சதவீத வாக்குகளும் பதிவாகின.
தபால் ஓட்டுகள் என்று சேர்த்து 3 கட்டமாக நடந்த தேர்தலில் மொத்தம் 78.64 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சிகள், நகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட தேர்தல் முடிவுகளில் கிராம பஞ்சாயத்துகளை பொறுத்தவரையில் இடது ஜனநாயக முன்னணி 484 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 383 இடங்களிலும் பாஜக 22 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
ஒன்றிய பஞ்சாயத்துகளில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி 103 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
மாவட்ட பஞ்சாயத்துகளில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி 9 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
மாநகராட்சிகளில் இடது ஜனநாயக முன்னணி 3 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
நகராட்சிகளில் இடது ஜனநாயக முன்னணி 41 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
கொச்சி காங்கிரஸ் மேயர் வேட்பாளர் என் வேணுகோபால், நார்த் ஐலேண்ட் வார்டில், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT