Published : 15 Dec 2020 07:38 PM
Last Updated : 15 Dec 2020 07:38 PM
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள்.விவசாயிகளுடன் ஆலோசித்து ஒப்புதலுடன் புதியச் சட்டங்களை இயற்றுங்கள் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியின் பல்வேறு எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 20-வது நாளை எட்டியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநில விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய 5 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த 40 தலைவர்கள் நேற்று டெல்லி எல்லையின் பல்வேறு பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இனிவரும் நாட்களில் போராட்டத்தைத் தீவிரப்படுத்த விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டர் வாயிலாக மத்திய அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு தான் உயர்ந்தவர் என்ற சிந்தனையிலிருந்து கீழே இறங்கி வந்து, விவசாயிகளுடன் விரைவாக ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும்.
விரைவாக முன்னெடுத்துச்செல்லும் வழி என்பது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்று, விவசாயிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய சட்டங்களை இயற்றுவதுதான்.
சட்டங்களைத் திரும்பப் பெற்று, புதிதாக இயற்றுவது என்பது நன்கு அறியப்பட்ட சட்டரீதியான கருவியாகும். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே எந்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும், தேவைப்படும் புதிய மசோதா அவசியம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
டெல்லியின் கடும் குளிரில் கடந்த 20 நாட்களாக விவசாயிகள் போராடி வரும்நிலையில், அரசு தொடர்ந்து சட்டங்களை திரும்பப் பெறமுடியாது என்ற நிலைப்பாட்டில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT