Published : 15 Dec 2020 09:28 AM
Last Updated : 15 Dec 2020 09:28 AM
தங்கள் இடையே பிளவை உருவாக்கி திசைதிருப்ப மத்திய அரசு முயல்வதாக போராட்டக் களத்தின் விவசாய சங்கத் தலைவர்கள் புகார் எழுப்புகின்றனர். மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
டெல்லியில் போராடும் முக்கிய 32 விவசாய சங்கங்களில் ஒன்றாக இடம் பெற்றிருப்பது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாரதிய கிஸான் யூனியன். இதன் இரண்டிற்கும் மேற்பட்ட பிரிவுகளும் உபி-டெல்லி எல்லையிலுள்ள நொய்டாவின் செக்டர் 14-ஏவில் சாலையை மறித்து போராடுகின்றனர்.
இதில், ஒன்றாக பாரதிய கிஸான் யூனியனின் பானு பிரதாப் சிங் தலைமையிலான பிரிவும் இருந்தது. நேற்று முன் தினம் இரவு சில விவசாய சங்கங்களுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் மத்திய விவசாயத்துறை அமைச்சரான நரேந்தர்சிங் தோமரும் இருந்தார். இதில் பாரதிய கிஸான் யூனியனின் பானு தலைமையிலான பிரிவும் கலந்துகொண்டு பேசியது.
இதையடுத்து, தமது போராட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இச்சங்கம் சார்பில் மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஹரியானாவின் பாரதிய கிஸான் யூனியனின் ஏக்தா உக்ரஹான் பிரிவும் மத்திய அரசிற்கு ஆதரவாகி போராட்டத்திலிருந்து விலகும் நிலை தெரிகிறது. இந்த சங்கத்தினரும் ஹரியாணாவின் டிக்ரி எல்லையில் போராடுகின்றனர்.
இதன் மேடையில், கடந்த வாரம் வியாழக்கிழமை வந்த சர்வதேச மனித உரிமை நாளில் தேசவிரோத வழக்குகளில் கைதானவர்களின் விடுதலை கோரி எழுந்த கோஷம் சர்ச்சையானது. இதை கண்டித்து சில மத்திய அமைச்சர்கள்,
விவசாயிகளின் போராட்டம் தேசவிரோதிகளாலும், இடதுசாரிகளாலும் கைப்பற்றப்பட்டு விட்டதாகப் புகார் தெரிவித்தனர்.
இதனிடையே, ஏக்தா உக்ரஹான் தலைவரான சுக்தேவ் சிங், தமது சங்கத்தினர் நேற்றைய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. எனினும், மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மற்ற சங்கங்களின் போராட்டம் தொடர்கிறது.
இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் டெல்லியில் போராடும் முக்கிய விவசாய சங்கங்களில் ஒன்றான கிஸான் சன்யுக்த் மோர்ச்சாவின் தலைவரான காகாஜி என்றழைக்கப்படும் ஷிவ்குமார் கூறும்போது, ‘மத்திய அரசுடன் பேசிப் பலனில்லை என்பதால் எங்கள் போராட்டத்தை பல்வேறு வகைகளில் தீவிரப்படுத்தி உள்ளோம்.
இதில் பிளவை உருவாக்கி போராட்டத்தை தோல்வியுறச் செய்யும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. துவக்கம் முதல் மத்திய அரசிற்கு ஆதரவாக இருக்கும் சங்கங்கள் இதற்கு துணை போகின்றன.’ எனத் தெரிவித்தார்.
இதே பிரச்சனையில் ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பாரதிய கிஸான் யூனியன் சாருனி பிரிவின் தலைவரான குருநாம்சிங் சாருனி கூறும்போது, ‘முக்கியமான 40 விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒன்றாகக் கூடி ஏகமனதோடு இப்போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
சிங்கு எல்லையில் கூடி எடுக்கப்படும் எங்கள் தலைவர்களின் முடிவுகள் அனைத்து விவசாய சங்கங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்த 17 மாநில விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்திருந்தது.
இதை ஏற்று, தமிழகத்தில் வேட்டவலம் மணிகண்டன், கேரளாவில் பாபு ஜோசப், மஹராஷ்டிராவில் குன்வத் பட்டேல், ராஜஸ்தானின் தினேஷ் சர்மா உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர். இவர்கள் அனைவரும் டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT