Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM
‘‘தரை, வான், கடல் என எந்த இடத்திலும் எதையும் சந்திக்க இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன’’ என்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையை வலுப்படுத்த உள்நாட்டிலேயே போர்க் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 'புராஜக்ட் 17ஏ' என்ற திட்டத்தின் அடிப்படையில் சிறிய ரகத்தை சேர்ந்த 7 போர்க் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த போர்க் கப்பல்களுக்கு நீலகிரி, ஹிம்கிரி, தாராகிரி, உதயகிரி, துனாகிரி, விருதகிரி, மகேந்திர கிரி என்று இந்திய மலைகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
கொல்கத்தா கட்டுமான தளத்தில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் ஹிம்கிரி என்ற போர்க் கப்பலின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. 149 மீட்டர் நீளம், 6,670 டன் எடை கொண்ட இந்த போர்க் கப்பலில் நவீன ஏவுகணைகள், ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. போர்க் கப்பலின் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
லடாக் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. திபெத் எல்லைப் பகுதிகளில் சீனா உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன. தரை, வான், கடல் எல்லைகளில் எழும் அச்சுறுத்தல்களை முறியடிக்க இந்திய படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் எந்த எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல் எழுந்தாலும் அதை சந்திக்கும் திறன் நமக்கு உள்ளது. இவ்வாறு பிபின் ராவத் தெரிவித்தார்.
சீனா, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
கிழக்கு லடாக் எல்லை பிரச்சினையால் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர்ப் பதற்றம் நீடிக்கிறது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது.
சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் கடற்படைகள் இணைந்து வங்க கடல், அரபிக் கடலில் அண்மையில் போர் ஒத்திகை நடத்தின. இதற்குப் போட்டியாக சீன, பாகிஸ்தான் விமானப் படைகள் இணைந்து பாகிஸ்தானின் கராச்சியில் போர் ஒத்திகை நடத்தி வருகின்றன. இந்த பின்னணியில் இந்திய தலைமை தளபதி பிபின் ராவத், சீனா, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT