Published : 14 Dec 2020 03:40 PM
Last Updated : 14 Dec 2020 03:40 PM
கடந்த 1975-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நாட்டில் கொண்டுவரப்பட்ட அவசரநிலை அரசியலமைப்புச் சட்டத்துக்கு முழுமையாக எதிரானது என அறிவிக்கக் கோரி அவசரநிலையால் பாதி்க்கப்பட்ட 94-வயது மூதாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் மத்திய அரசு அளிக்க இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வீரா செரீன் எனும் 94- வயது மூதாட்டி சார்பில் இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே தாக்கல் செய்தார்.
அரசியலமைப்புச்சட்டம் வழங்கிய அனைத்து உரிமைகளும் பல மாதங்களுக்கு மக்களிடம் பறிக்கப்பட்டன, இது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல், இந்த அவசரநிலையால் தான் அடைந்த பாதிப்புக்கு ரூ.25 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று மூதாட்டி தெரிவித்துள்ளார்.
மனுதாரர் வீரா செரீன் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில் “ நானும், எனது கணவரும் டெல்லியில் கலைபொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தோம். கடந்த 1975ம் ஆண்டு ஜூன் 25-ம்தேதி இந்தியாவில் அவசரநிலை கொண்டுவரும் சில மணிநேரத்துக்கு முன் அதிகாரிகளும், மற்றவர்களும் நடத்திய அட்டூழியங்களில் நானும், எனது கணவரும் பாதிக்கப்பட்டோம். எங்களை எந்தவிதமான நியாயமான காரணமும் இன்றி, சிறையில் அடைத்தனர். எங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டன.
எங்கள் சொத்துக்கள் முடக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. அவசரநிலை காலத்தில் நாங்கள் அடைந்த வேதனைக்கும், இழந்த உரிமைகள், சொத்துக்களை மீட்க இப்போது வரை நீதிமன்றத்துக்கு எங்கள் குடும்பத்தார் அலைந்து வருகிறார்கள். நெருக்கடி காலத்தில் என் கணவர் மீது போடப்பட்ட வழக்கில் அவர் உயிரிழந்தார். அந்த வழக்கை நான்தான் சந்தித்து சட்டப்போராட்டம் நடத்தினேன்.
நாங்கள் எங்கள் கடையில் வைத்திருந்த நகைகள், விலை உயர்ந்த ஓவியங்கள், கலைப்பொருட்கள், சிலைகள், மதிப்பு மிக்க பொருட்களை இன்று வரை அரசிடம் இருந்து மீட்க முடியாமல் தவிக்கிறோம்.
நெருக்கடிநிலை என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று நாட்டின் உச்சபட்ட நீதி அமைப்பான மக்களால் அதிகமான நம்பிக்கை கொண்ட உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே அறிவிக்க முடியும். எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ.25 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும்
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி எஸ்.கே.கவுல் கூறுகையில் “ நாட்டில் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை 45 ஆண்டுகளுக்குப்பின் ஆய்வு செய்வது சாத்தியமானதா அல்லது விரும்பத்தக்கதா என உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யும். உங்கள் மனுவை ஏற்கிறோம்.
இதில் எங்களுக்கும் சிரமங்கள் இருக்கின்றன. அவசரநிலை கொண்டுவந்திருக்கக் கூடாது. இந்த மனுவுக்கு மத்திய அரசு பதில்அளிக்க நோட்டீஸ் அளிக்க உத்தரவிடுகிறேன்" எனத் தெரிவித்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே, “ நெருக்கடி நிலை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல். பல மாதங்களாக மக்களின் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன” எனத் தெரிவித்தார்.
கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசரநிலை 1977ம் ஆண்டு மார்ச் மாதம் நீக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT