Published : 14 Dec 2020 10:01 AM
Last Updated : 14 Dec 2020 10:01 AM
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 19-வது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாயிகள் சங்கங்களைக் சேர்ந்த 40 தலைவர்கள் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள்.
போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஏராளமானோர் டெல்லி எல்லையில் நடந்து வரும் போராட்டத்தில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியின் பல்வேறு எல்லைகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 19-வது நாளை எட்டியுள்ளது. பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநில விவசாயிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய 5 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த 40 தலைவர்கள் இன்று டெல்லி எல்லையின் பல்வேறு பகுதிளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) அமைப்பின் பொதுச் செயலாளர் ஹரிந்தர் சிங் லகோவால் கூறுகையில், “மத்திய அரசை விழிப்படையச் செய்ய முயல்கிறோம். ஆதலால், விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 40 தலைவர்கள் இன்று டெல்லி எல்லையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை சிங்கு எல்லையில் 25 பேர், திக்ரி எல்லையில் 10 பேர், உ.பி. எல்லையில் 5 பேர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறார்கள்.
எங்களை அரசு தடுத்து நிறுத்த முடியாது. இது விவசாயிகள் போராட்டம் அல்ல. மக்களின் போராட்டமாக மாறியுள்ளது. மத்திய அரசு கார்ப்பரேட் முதலாளிகள் நலனுக்காக நடக்கிறது. இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் ஓயாது” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்க வேண்டும் என முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT