Published : 14 Dec 2020 09:02 AM
Last Updated : 14 Dec 2020 09:02 AM
டெல்லி -ஹரியாணா சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை மாவோயிஸ்டுகளாகவும், காலிஸ்தான் இயக்கத்தினராகவும் சித்தரித்தால், ஏன் அவர்ளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொழில், வர்த்தகக் கூட்டமைப்பின் 93-வது ஆண்டு விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று பேசுகையில், “விவசாயிகள் போராட்டத்தின் போக்கு திசை மாறுகிறது. கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகளுடன் மாவோயிஸ்டு ஆதரவாளர்களை, இடதுசாரிக் கொள்கை கொண்டோரை அதிகமாகப் பார்க்க முடிகிறது.
வேளாண் போராட்டத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? போராட்டத்தின் நடுவே தங்களின் தலைவர்களை விடுவிக்கக் கோரிக்கையை முன்வைக்கின்றனர். தேசத் துரோக குற்றத்திற்காக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க விவசாயிகள் போராட்டத்தில் கோரிக்கை வைக்கின்றனர். இதில் அறிவுஜீவுகளும், கவிஞர்களும் கலந்து கொள்வது வேடிக்கையானது.
உங்களுக்கு ஏதேனும் கோரிக்கை இருந்தால் அதை அரசாங்கத்திடம் முன்வையுங்கள். அதைவிடுத்து வேளாண் போராட்டத்தில் ஆதாயம் தேடாதீர்கள்” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
மேலும், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும், விவசாயிகள் போராட்டத்தில் சமூகவிரோத சக்திகள் நுழைந்திருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்திய அரசுக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், “வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளைக் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பாகிஸ்தான், சீனாவின் ஏஜெண்டுகள் என்றும், மாவோயிஸ்டுகள் என்றும், சமீபத்தில் சிறுசிறு கும்பல் என்றும் போராட்டக்காரர்களை மத்திய அமைச்சர்கள் சித்தரிக்கிறார்கள்.
நீ்ங்கள் குறிப்பிடும் இந்தப் பிரிவினரைப் போராட்டக் களத்திலிருந்து வெளியேற்றினால், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களில் விவசாயிகள் இருக்கமாட்டார்கள் என்று கூறுகிறீர்களா? போராட்டம் நடத்துவோரில் விவசாயிகள் இல்லாவிட்டால், ஏன் அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது?” என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில், “விவசாயிகள் போராட்டம் பஞ்சாப், ஹரியாணாவுடன் நின்றுவிட்டது எனக் கூறுவது தவறு. மத்தியப் பிரதேசத்தில் கடந்த ஓராண்டில் 47 வேளாண் சந்தைகள், 298 துணைச் சந்தைகள் ஆகியவை புதிய வேளாண் சந்தைகள் காரணமாக மூடப்பட்டதால், அரசுக்கு வரி வருவாய் ரூ.1200 கோடியிலிருந்து ரூ.220 கோடியாகக் குறைந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், “வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளைத் தீவிர இடதுசாரிகள், சமூக விரோத சக்திகள் என்று அமைச்சர்கள் மூலம் மத்திய அரசு அவமானப்படுத்த முயல்கிறது. பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் விவசாயிகள் தரப்பில் நடந்துள்ள நிலையில்கூட, அரசு இன்னும் பிடிவாதத்துடன், அகங்காரத்துடன் உணர்வில்லாமல் இருக்கிறது. விவசாயிகள் இயக்கத்தை அவதூறு செய்வதைச் சகிக்க முடியாது. இதைக் கண்டிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT