Published : 14 Dec 2020 08:12 AM
Last Updated : 14 Dec 2020 08:12 AM
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களை குறைந்த பட்ச ஆதார விலைக்கு கீழ் கொள்முதல் செய்தால், அதை சட்டவிரோதமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ஸ்வதேசி ஜாக்ரன் மான்ச் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழாக அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாது, தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்வதை சட்டவிரோதமாக்க சட்டத்திருத்தம் தேவை என்று எஸ்ஜேஎம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், விவசாயிகள் நலனுக்காக நல்லெண்ணத்துடன்தான் இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாகவும் ஜாக்ரன் மான்ச் தெரிவித்துள்ளது.
ஸ்வேதசி ஜாக்ரன் மான்ச் இணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி மகாஜன் வெளியிட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பண்நாட்டு நிறுவனங்கள், மிகப்பெரிய இந்திய வர்த்தக நிறுவனங்கள்(ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்) இடையே நெருக்கமான தொடர்பு ஏற்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது. நாட்டின் சில்லறை வர்த்தகத்தில் இந்த நிறுவனங்கள் ஆதிக்கம்செலுத்தி, விவசாயிகள், சிறு கடைகளின் முதலாளிகள், மொத்த விற்பனையாளர்கள், நுகர்வோர்களையும் கூட சுரண்டுவதற்கும் வழிவகுத்துவிடும்.
பன்நாட்டு நிறுவனங்கள் பல விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியபோதெல்லாம் அந்த விதிமுறை மீறல் அளவுக்குமீறி இல்லை எனக் கூறி அரசு மழுப்பியது. ஆதலால், பன்முக சில்லறை விற்பனையில் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இதன் மூலம் நிறுவனங்களுக்கு இடையே தந்திரமாக ஒப்பந்தங்கள் செய்வது தடுக்கப்படும்.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தம், சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்படும் பொருட்கள் கட்டுப்பாடுகளை நீக்கிவிடும். இதனால் ஏற்றுமதியாளர்கள், சூப்பர்மார்க்கெட் முதலாளிகள், மிகப்பெரிய மொத்த விற்பனையாளர்கள் பதுக்கல்வேலையில் ஈடுபடுவார்கள்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையேயும், இந்திய வர்த்தக பெருநிறுவனங்களுக்கு இடையே கூட்டுவைத்து செயல்படுவதை அனுமதிக்க கூடாது. சிறுகடைகள், நடுத்தரக் கடைகளில் ஏராளமான மக்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.
மண்டிகளுக்கு கட்டணம் முறை இல்லாததால் இயல்பாகவே வாங்குபவர்கள் ஏபிஎம்சி சந்தைக்கு வெளியேதான் கொள்முதல் செய்ய விரும்புவார்கள். விவசாயிகளும் தங்கள் பொருட்களை சந்தைக்கு வெளியே விற்பனைசெய்யத் தள்ளப்படுவார்கள்.
இதனால் பெருநிறுவனங்கள் விவசாயிகளைச் சுரண்டி அவர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு பொருட்களை கொள்முதல் செய்யலாம். ஆதலால், ஏபிஎம்சி சந்தைக்கு வெளியே கொள்முதல் செய்ய அனுமதிக்க கூடாது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ் அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்வதை சட்டவிரோதமாக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பல பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டுவைத்து செயல்படுவது கவலையளிக்கிறது. தற்போது சில்லறை வர்த்தகத்தில் 38 சதவீதம் ரிலையன்ஸிடம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்த வளர்ச்சி என்பது சந்தையில் முற்றுரிமை, தான்ஒருவர்தான் நிலையை ஏற்படுத்தி, விவசாயிகள், சப்ளை செய்பவர்களை சுரண்டும்நிலைக்கு தள்ளும், இதனால் மிகவும் குறைந்தவிலைக்கு அவர்களிடம் பொருட்களை கொள்முதல் செய்ய கட்டாயப்படுத்தும் நிலை ஏற்படும். நுகர்வோருக்கு அதிகமான விலையில் பொருட்கள் விற்க வேண்டிய நிலை ஏற்படும். சந்தையில் ஆரோக்கியமான போட்டி இருக்காது.
ஆதலால், மத்திய அரசு சில்லறை வர்த்தகத் துறையில் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுவருவதை கருத்தில் கொண்டு அரசுஆய்வு செய்ய வேண்டும். இணைய வர்தத்கத்தின் மூலம் மருந்துகள் விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும்
இவ்வாறு அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT