Published : 08 Oct 2015 04:08 PM
Last Updated : 08 Oct 2015 04:08 PM
இம்மாதம் 18-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஒருநாள் போட்டியின் போது படேல்கள் ஸ்டேடியத்தில் அமைதிப் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர்.
அக்டோபர் 18-ம் தேதி இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் ராஜ்கோட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோதவிருக்கும் போது மைதானத்துக்கு படேல் சமூகத்தினர் சுமார் 10,000 பேர் வந்து தங்கள் கோரிக்கைகளை அமைதியான முறையில் வலியுறுத்தப் போவதாக ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.
"பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து எங்கள் கோரிக்கைகளை ஆட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வலியுறுத்தவுள்ளோம்” என்றார் ஹர்திக் படேல்.
அவர் மேலும் கூறும்போது, “இதுவரை 1,000 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளோம், வரும் நாட்களில் மேலும் டிக்கெட்டுகளை வாங்கவுள்ளோம். எங்கள் உறுப்பினர்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்ட ‘ஜெய் சர்தார்’ என்ற வாசகம் கொண்ட டி-சர்ட்களை அணிந்து ரசிகர்கள் மத்தியில் அமர்ந்து எங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவோம், ஆட்டத்துக்கு எந்தவித இடையூறும் விளைவிக்கப் படமாட்டாது” என்றார்.
ஹர்திக் படேலின் இந்த அறிவிப்பை தொடர்ந்து 3-வது ஒருநாள் போட்டியை பார்வையிட வரவிருந்த குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் தனது வருகையை ரத்து செய்துள்ளார்.
அசலான அடையாள அட்டைகளை காண்பித்தால் மட்டுமே டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று மாநில போலீஸ் அறிவித்துள்ளது. அதே போல் கோஷஙக்ள் அடங்கிய அட்டைகள் மைதானத்துக்குள் அனுமதிக்க படமாட்டாது என்றும் மாநில போலீஸ் அறிவித்துள்ளது.
மொத்தம் 27,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய ராஜ்கோட் மைதானத்தில் படேல்கள் மட்டும் 10,000 பேர் ஆக்கிரமிப்பது பற்றி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் நிரஞ்சன் ஷா கூறும்போது, “இது பெரிய விவகாரமாகும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் ராஜ்கோட் மைதானத்தின் மீதான மதிப்பே கெட்டு விடும், பிறகு எங்களுக்கு சர்வதேச போட்டிகளே கிடைக்காமல் போய்விடும்” என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT