Published : 13 Dec 2020 03:41 PM
Last Updated : 13 Dec 2020 03:41 PM
கேரளாவில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் விடுத்த அறிவிப்புக்கு எதிராக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை மாநிலத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன.
மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து வரும்போது, முதல்வர் பினராயி விஜயனின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி இது சிறுபிள்ளைத்தனம் என்று விமர்சித்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தபின், கேரள மக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும். மக்களிடம் இருந்து எந்தக் கட்டணமும் அரசு வாங்காது. இலவசமாகத் தடுப்பூசி போடப்படும். இதுதான் எங்களின் நிலைப்பாடு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும் என்பது தெரியவில்லை” எனக் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து வருகிறது. மூன்று கட்டங்களாக நடந்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் இருகட்டத் தேர்தல் முடிந்த நிலையில், வரும் 14-ம் தேதி இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தச் சூழலில் கரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் எனும் முதல்வர் பினராயி விஜயனின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இருக்கிறது என காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ஹசன் நிருபர்களிடம் கூறுகையில், “கேரளாவின் வடக்கு மாவட்டங்களில் வரும் 14-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், முதல்வரின் கரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்பு தேவையா? இந்த அறிவிப்பை இப்போது அவசரமாக அறிவிக்க வேண்டியதில்லை.
இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இருப்பதால், நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். மூத்த தலைவர் கே.சி.ஜோஸப் ஆன்லைனில் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அிதல், ''முதல்வர் கரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வாக்காளர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்த முயல்கிறார். இது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகும்'' எனத் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் திருச்சூரில் நிருபர்களிடம் கூறுகையில், “மாநிலத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. சிகிச்சைக்கான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதுதொடர்பாகத்தான் முதல்வர் விளக்கமாகப் பேசினார். காங்கிரஸ் கூட்டணி பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT