Published : 13 Dec 2020 12:09 PM
Last Updated : 13 Dec 2020 12:09 PM
தங்களை எதிர்ப்பவர்கள் ஒவ்வொருவரையும் மாவோயிஸ்ட்டாகவும், தேச விரோதியாகவும் மோடி அரசு சித்தரிக்கிறது. போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தொழில், வர்த்தகக் கூட்டமைப்பின் 93-வது ஆண்டு விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று பேசுகையில், “விவசாயிகள் போராட்டத்தின் போக்கு திசை மாறுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகளுடன் மாவோயிஸ்டு ஆதரவாளர்களை, இடதுசாரிக் கொள்கை கொண்டோரை அதிகமாகப் பார்க்க முடிகிறது. வேளாண் போராட்டத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? போராட்டத்தின் நடுவே தங்களின் தலைவர்களை விடுவிக்கக் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
தேசத் துரோக குற்றத்திற்காக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க விவசாயிகள் போராட்டத்தில் கோரிக்கை வைக்கின்றனர். இதில் அறிவுஜீவுகளும், கவிஞர்களும் கலந்து கொள்வது வேடிக்கையானது.
உங்களுக்கு ஏதேனும் கோரிக்கை இருந்தால் அதை அரசாங்கத்திடம் முன்வையுங்கள். அதைவிடுத்து வேளாண் போராட்டத்தில் ஆதாயம் தேடாதீர்கள்” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
மேலும், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும், விவசாயிகள் போராட்டத்தில் சமூகவிரோத சக்திகள் நுழைந்திருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பதிலடி தரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:
''ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்துக்கு இடமில்லை பிரதமர் மோடி. உங்களுடைய, உங்களின் அமைச்சர்களின் கொள்கையே உங்களை எதிர்ப்பவர்கள் ஒவ்வொருவரையும் தேசவிரோதியாகவும், மாவோயிஸ்ட்டுகளாகவும் சித்தரிப்பதுதான்.
மழையிலும், கடும் குளிரிலும், வெயிலும் கிடந்து போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மன்னிப்பு கோருங்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள்.
விவசாயிகளுக்குத் தேவை, மக்கள் நலனில், மக்களுக்காகச் செயல்படும் அரசுதான். பிரதமர் மோடியின் ஜோடனையான வார்த்தைகளைக் கொண்ட பேச்சு அல்ல. இந்த தேசத்தில் உள்ள மக்கள் உணவுப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கவேண்டும் என விரும்புகிறார்கள்.
ஆனால், குழந்தைகளைக் குஷிப்படுத்த லாலிபாப் மிட்டாய் கொடுக்கும் வகையில் இருக்கும் பிரதமர் மோடியின் பேச்சு தேசத்தின் மக்களைச் சோர்வடையச் செய்கிறது''.
இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT