Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM
நாடு முழுவதும் 30 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் படிப்படியாகக் குறைந்து வருகிறது. எனினும், வைரஸ் தொற்றில் இருப்பவர்களுக்கு, புதிதாக தொற்று ஏற்படுபவர்களுக்கு தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்காக கரோனா தடுப்பூசியைப் குளிர்ந்த நிலையில் வைக்கவும், அவற்றை பாதுகாப்பான முறையில் நாடு முழுவதும் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது. அதற்காக 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் (36 முதல் 48 பாரன்ஹீட்) வரை உள்ளகுளிர்ப்பதன கிடங்குகளை மத்திய அரசு அமைத்து வருகிறது என்றுதடுப்பூசி விநியோகத்தில் நிபுணத்துவம் பெற்ற குழுவின் தலைவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வி.கே.பால் மேலும் கூறியதாவது:
தற்போதைக்கு சீரம், பாரத், சைடஸ், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய 4 தடுப்பூசிகள் உள்ளன. இந்த தடுப்பூசிகளை சாதாரண குளிர்நிலையிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
முன்னுரிமை அடிப்படையில்
மக்களின் உயிரைக் காக்க, 30 கோடி மக்களுக்குமுதல் கட்டமாக 2 முறை (60 கோடி) கரோனா தடுப்பூசி வழங்கமத்திய அரசு திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்து வருகிறது.ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்டவர்கள், பிற நோய் பாதிப்பு உள்ளவர்கள், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் என பிரித்து முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசியை 6 முதல் 8 மாதங்களுக்குள் வழங்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் காலங்களில் நாடு முழுவதும் களப் பணியாளர்கள் வேலைசெய்வது போல், தடுப்பூசி வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு வி.கே.பால் கூறினார்.
உலகிலேயே மிகப்பெரிய சீரம் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம் சீரம், தற்போது கரோனா தடுப்பு மருந்துகளை ஏராளமாகத் தயாரித்து வைத்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ரா ஜெனிகாவின், ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியும் தயார் நிலையில் உள்ளது.
அத்துடன், இந்தியாவின் பாரத் பயோடெக், சைடஸ் ஆகிய நிறுவனங்களும் சொந்தமாக தடுப்பூசி கண்டுபிடித்து விநியோகத்துக்கு தயாராகி வருகின்றன. அத்துடன், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை உற்பத்தி செய்ய, இந்தியாவின் ஹெட்டரோ நிறுவனம் கடந்த மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT