Published : 12 Dec 2020 10:11 PM
Last Updated : 12 Dec 2020 10:11 PM
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளும், இடதுசாரி கொள்கை கொண்டோரும் ஊடுருவியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 16-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தப் போவதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், மத்திய அரசோ விவசாயிகள் போராட்டம் அதன் தன்மையை இழந்துவிட்டதாகவும் போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவியுள்ளதாகவும் விமர்சிக்கிறது.
தொழில், வர்த்தகக் கூட்டமைப்பின் 93-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய ரயில்வே அமைச்சர் இந்த சர்ச்சைக் கருத்தை முன்வைத்துள்ளார்.
விழாவில் அவர் பேசியதாவது:
விவசாயிகள் போராட்டத்தின் போக்கு திசை மாறுகிறது. கடந்த இரண்டு நாட்களாக விவசாயிகளுடன் மாவோயிஸ்ட்டு ஆதரவாளர்களை, இடதுசாரி கொள்கை கொண்டோரை அதிகமாகப் பார்க்க முடிகிறது. வேளாண் போராட்டத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம். போராட்டத்தின் நடுவே தங்களின் தலைவர்களை விடுவிக்கக் கோரிக்கை முன்வைக்கின்றனர். தேசத் துரோக குற்றத்திற்காக சிறையில் இருப்பவர்களை விடுவிக்க விவசாயிகள் போராட்டத்தில் கோரிக்கை வைக்கின்றனர். இதில் அறிவுஜீவுகளும், கவிஞர்களும் கலந்து கொள்வது வேடிக்கையானது. உங்களுக்கு ஏதேனும் கோரிக்கை இருந்தால் அதை அரசாங்கத்திடம் முன்வையுங்கள். அதைவிடுத்து வேளாண் போராட்டத்தில் ஆதாயம் தேடாதீர்கள்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் நாட்டிலுள்ள 100 கோடி விவசாயிகள் பலனடைவர். பட்ஜெட்டில் விவசாயத்துக்கான ஒதுக்கீட்டை 6 மடங்கு அதிகரித்துள்ளது மோடி அரசு. இதனை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மத்திய அரசின் வேளாண் சட்ட நன்மைகளை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் கிராமப்புற இந்தியாவுக்கான முதலீட்டை அதிகரிக்கும் என எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பேசிய ஃபிக்கி தலைவரும் பார்தி என்டர்ப்ரைசஸின் துணைத் தலைவருமான் ரஞ்சன் பார்தி மிட்டல், "வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தச் சட்டங்களை முன்னெடுக்கும்போது தடைகள் வரும். ஆனால், அரசாங்கம் பின்வாங்கக் கூடாது. நிச்சயமாக தொழில்துறை அரசாங்கத்துக்குத் துணை நிற்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT