Published : 12 Dec 2020 07:58 PM
Last Updated : 12 Dec 2020 07:58 PM
அடுத்த 24 மணி நேரத்துக்குள் அல்லது அதிகபட்சமாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் விவசாயிகள் போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்கும் என ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதித்து, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் நடத்தும் போராட்டம் 15 நாட்களாக நடைபெறுகிறது.
இந்நிலையில், ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை இன்று (சனிக்கிழமை) சந்தித்தார்.
பாஜக கூட்டணிக் கட்சியான சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி, விவசாயிகளின் வாக்கு வங்கியைப் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகிறது. ஆகையால், விவசாயிகள் போராட்டத்துக்குத் தீர்வு கிட்டாவிட்டால் கூட்டணியை முறிக்கவும் தயார் நிலையில் உள்ளது.
இத்தகைய சூழலில்தான் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நரேந்திர சிங் தோமர் ஆகியோரை ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஏஎன்ஐ செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் நல்ல பலன் கிடைக்கப் பெறும். அடுத்த 24 மணி நேரத்துக்குள் அல்லது அதிகபட்சமாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் விவசாயிகள் போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்கும்.
இருதருப்பும் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் அமரும். அப்போது சுமுகமான முடிவு எட்டப்படும். விவசாயிகளின் பிரதிநிதியாக அவர்களின் உரிமையைப் பாதுகாப்பது எனது கடமையாகும். இருதரப்பும் ஒத்துழைத்து பிரச்சினைக்கு முடிவு வரும் என நான் நம்புகிறேன்" என்றார்.
விவசாயிகள் போராட்டம் ஒருபுறம் வலுப்பெற்றுக் கொண்டிருக்க, ஹரியாணா துணை முதல்வர் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.
டெல்லி புறநகர்ப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள் நாளை டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையை முடக்கத் திட்டமிட்டுள்ளனர். நாளை மறுநாள் முதல் பட்டினிப் போராட்டத்துக்குத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிகபட்சமாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு என ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT