Published : 12 Dec 2020 02:09 PM
Last Updated : 12 Dec 2020 02:09 PM
மத்திய அரசு தனது கொள்கைகள், எண்ணங்கள் மூலம் விவசாயிகள் நலனைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த 14 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் 93-வது ஆண்டு மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''வரித் தீவிரவாதம், அதிகாரிகளின் கண்காணிப்பு போன்றவை கடந்த கால ஆட்சியில்தான் இருந்தன. ஆனால், தற்போது இந்தியா உள்பட சில நாடுகளில் வரி செலுத்துவோரின், நிறுவன முதலீட்டாளர்களின் முகம் தெரியாமல் விண்ணப்பங்களைப் பெறுதல், வரி தொடர்பான விவகாரங்கள் கையாளப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் வரி மற்ற நாடுகளுடன் போட்டி போடக்கூடிய வகையில் இருக்கிறது. கடந்த ஆண்டில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டில் கரோனா வைரஸ் பரவலின் தொடக்கத்தில், உற்பத்தி, சரக்குப் போக்குவரத்து, பொருளாதாரம் மீள்தல் போன்றவற்றில் உறுதியற்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது சூழல் மாறிவிட்டது.
ஏராளமான விஷயங்கள் விரைவாக மாறியுள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின் நாம் நினைத்துப் பார்த்தால், நம்மால் எதையும் நம்பமுடியாத அளவுக்கு மாறியிருக்கும். ஏராளமான நல்ல அம்சங்கள் விரைவாக வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்துள்ளது. தெளிவான செயல் திட்டம் உள்ளது.
பிரச்சினைகள் நிரம்பிய நேரத்தில் தேசம் கற்றுக்கொண்ட விஷயங்கள், எதிர்காலத்துக்கு தேவையான தீர்மானத்தை வலிமைப்படுத்திக் கொள்ள வைத்துள்ளது. இதற்குக் காரணம் இந்திய தொழில்முனைவோர், இளைஞர்கள், விவசாயிகள், மக்கள்தான்.
கரோனா காலத்தில் மக்களின் உயிர்களைக் காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தேசமே ஒன்றுசேர்ந்து கொள்கைகளை வடிவமைத்தது, முடிவுகளை எடுத்து, சூழலை எதிர்கொண்டது. இந்தக் கரோனா காலம் உலகத்தையே புரட்டிப்போட்டது எனக் கூறலாம்.
இந்தியா எடுத்த நடவடிக்கைகளால் கடந்த 6 ஆண்டுகளாக உலகம் வைத்த நம்பிக்கை கடந்த சில மாதங்களில் மேலும் வலிமை பெற்றுள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள், அந்நிய நிறுவன முதலீடு கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
தற்சார்பு இந்தியாவை உருவாக்கவும், உள்நாட்டுத் தொழில்களுக்கும், பொருட்களுக்கு ஆதரவு அளிக்கவும் மக்கள் தயாராகி உறுதியெடுத்துவிட்டார்கள். இதன் மூலம் உள்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தெளிவாகிறது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களால்தான் உள்நாட்டுத் தேவையை நிறைவு செய்ய முடியும், வெளிநாடுகளிலும் பரவ முடியும்.
வேளாண் துறையில் இருக்கும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மண்டிகளிலும், வெளியிலும் சுதந்திரமாக விற்பனை செய்ய முடியும்.
மத்திய அரசு தனது கொள்கைகள், எண்ணங்கள் மூலம் விவசாயிகளின் நலனைக் காக்க கடமைப்பட்டுள்ளது. வேளாண் துறையில் தனியார் துறை முதலீடுகள் போதுமான அளவில் இல்லாதது வருத்தமளிக்கிறது. வேளாண் துறையில் தனியார் முதலீடுகள் அதிகம் வர வேண்டும். உரங்கள் உற்பத்தி, விளைபொருட்களைப் பதப்படுத்துதல், சேமிப்புக் கிடங்கு போன்றவற்றில் தனியார் முதலீடு அதிகம் வர வேண்டும்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT