Published : 18 Mar 2014 12:00 AM
Last Updated : 18 Mar 2014 12:00 AM
தேர்தல் ஆணையத்தின் தேசிய மற்றும் மாநில இணையதளங்களை முடக்கி தேர்தல் பணிகளை ’ஹேக்கர்கள்’ சீர்குலைக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசுக்கு உளவுத் துறை எச்சரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மீது தற்போது அனைத்து நாடுகளின் பார்வையும் விழுந்துள்ளது. இங்கு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலே இதற்கு காரணம். இந்த சூழலை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இந்திய விரோதிகள் சிலரும் தீவிரவாத அமைப்புகளும் இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இதன்படி 81.4 கோடி வாக்களர்களுக்கான முக்கிய தகவல்களை தரும் இணைய தளங்களை முடக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல்களை கடந்த மாதம் திரட்டிய மத்திய உளவுத் துறை அதிகாரிகள் இவற்றை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
அமெரிக்கா, ரஷியா, வடகொரியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த இணையதள ஹேக்கர்கள், இந்த நாச வேலையில் ஈடுபட உள்ளதாகவும், இவர்கள், டெல்லி, சென்னை, பெங்களூர் போன்ற பெரிய நகரங்களை சுற்றியுள்ள இடங்களில் இருந்து கொண்டும் நாசவேலைகளை செய்ய முயல்வார்கள் எனவும் தகவல் அளிக்கப் பட்டுள்ளது.
இதற்கு உதாரணமாக, கடந்த டிசம்பர் 4-ம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது இணைய தளங்களின் `சர்ச் இன்ஜின்’ சிலமணி நேரம் சரியாக வேலை செய்யாமல் போனதையும், இந்த ஹேக்கிங் முயற்சி பின்னர் முறியடிக்கப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஹேக்கர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்துகொண்டு சீனாவின் சர்வர் மூலமாக ஹேக் செய்ய முயன்றதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் எடுத்துரைக்கப் பட்டுள்ளது.
இதை தி இந்துவிடம் உறுதி செய்த மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “இந்த முடக்குதலை முறியடிக்கும் வகையில் முன்னேற்பாடாக சிறப்பு நிபுணர்களின் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இணைய தளங்களை பராமரிக்கும் தேசிய தகவல் மையத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஹேக்கர்களை முறியடிக்க பல டேட்டா பேஸ் எனும் தரவுத்தளம் மற்றும் ஃபயர் வால்களும் அமைக்கப்பட்டுள்ளன” என்றனர்.
இந்தியாவின் இணைய தளங்களை ஹேக்கர்கள் முடக்குவது கடந்த ஆண்டில் இருந்து அதிகரித்து வருகிறது. மத்திய தகவல் மையத்தின் ஒரு ரகசிய புள்ளிவிவரத்தின்படி, 2013 மே மாதத்தில் 1,801 முறையும், ஜூனில் 2,858, ஜூலையில் 2,380, ஆகஸ்டில் இது அதிகரித்து 4,101 முறை இணைய தளங்கள் முடக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT