Published : 12 Dec 2020 01:44 PM
Last Updated : 12 Dec 2020 01:44 PM
ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 1.40 லட்சம் இடங்களை நிரப்ப கணினி அடிப்படையிலான தேர்வு 3 கட்டங்களாக நடக்கிறது. 2.44 கோடிப் பேர் எழுதும் இந்தத் தேர்வுக்கு வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, கரோனா இல்லை என ஒப்புதல் கடிதம் கொண்டு வர வேண்டும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் மனிதவளப் பிரிவு இயக்குநர் ஆனந்த் எஸ்.காத்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''ரயில்வேயில் காலியாக இருக்கும் 1.40 லட்சம் இடங்களை நிரப்ப 3 கட்டங்களாக கணினி அடிப்படையில் தேர்வு நடத்தப்பட உள்ளது. 2.44 கோடிப் பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். முதல் சுற்றுத் தேர்வு டிசம்பர் 15 முதல் 18-ம் தேதி வரையிலும், 2-வது சுற்றுத் தேர்வு டிசம்பர் 28 முதல் 2021 மார்ச் மாதம் வரையிலும், மூன்றாவது சுற்றுத் தேர்வு 2021 ஜூன் வரையிலும் நடைபெறும்.
இந்தத் தேர்வுக்கு வருவோர் அனைவரிடமும் கரோனா இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் கோருவது சாத்தியமில்லை என்பதால், தேர்வு எழுத வருவோர் தங்களுக்குக் கரோனா இல்லை, அமர்ந்து தேர்வு எழுதும் அளவுக்கு உடல் தகுதி இருக்கிறது எனக் கடிதம் எழுதிக் கொண்டுவர வேண்டும். தேர்வுக்கு முன் இந்தக் கடிதத்தை ஒப்படைக்க வேண்டும்.
தேர்வு மையத்துக்கு தேர்வு எழுத வருவோர் வெப்பமானியில் பரிசோதிக்கப்படுவார்கள். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மீறி உடல் வெப்பம் இருந்தால், அந்தத் தேர்வாளருக்கு வேறு நாளில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பெரும்பாலும் தேர்வு எழுதுவோருக்கு அந்தந்த மாநிலத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்படும். அதிலும் குறைந்த அளவு பயண நேரம் இருக்கும் வகையில் தேர்வு மையம் இருக்கும்.
பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடக்கும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பாக ஆர்ஆர்பி இணையதளத்திலிருந்து மின் அழைப்புக் கடிதத்தை தேர்வு எழுதுவோர் பதிவிறக்கம் செய்யலாம்.
அடுத்தகட்டத் தேர்வு குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். தேர்வு எழுத வருவோருக்கு வசதியாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
ரயில்வே தேர்வுக்கு வரும் தேர்வாளர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றை மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், உள்ளாட்சி நிர்வாகங்கள் செய்து தருமாறு ரயில்வே சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த 1.40 லட்சம் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்களுக்கு எந்தவிதமான நேர்முகத் தேர்வும் இல்லை. முழுவதும் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள். இந்தத் தேர்வு தொடர்பான பணிகள் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வேலைவாய்ப்பு உறுதிக் கடிதம் வழங்க ஓராண்டு ஆகும்''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT