Last Updated : 12 Dec, 2020 10:55 AM

1  

Published : 12 Dec 2020 10:55 AM
Last Updated : 12 Dec 2020 10:55 AM

டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம் பரிசீலனை

கோப்புப் படம்.

புதுடெல்லி

வாக்காளர்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த விவகாரத்தில் எந்த முடிவும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. இது பிரசீலனையில்தான் இருக்கிறது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், “மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது குறித்து ஆலோசனைகளையும், கருத்துகளையும் பெற்று வருகிறோம், பரிசீலனையும் செய்து வருகிறோம்.

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை என்றால், வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையைக் காகிதத்தில், அட்டையில் வைத்திருக்கத் தேவையில்லை. அவர்களின் ஸ்மார்ட்போனில் தேர்தல் ஆணையத்தின் செயலியைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன், இணையதளம், மின்னஞ்சல் என எதில் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேகமாகவும் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிட முடியும். அடையாள அட்டையாகக் கொடுக்கும்போது காலதாமதம் ஆகிறது. வாக்காளர்களுக்குக் கிடைப்பதிலும் சிக்கல் இருக்கிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் விரிவான தகவல்கள் வெளியாகும்.

ஏற்கெனவே ஆதார் அட்டை, பான் எண், ஓட்டுநர் உரிமம் ஆகியவை டிஜிட்டல் வடிவத்தில் இருக்கின்றன. அதேபோல வாக்காளர் அடையாள அட்டையும் டிஜிட்டல் வடிவத்தில் இருக்கும். டிஜிட்டல் வடிவத்தில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும்போது புகைப்படம் தெளிவாக இருக்கும். அடையாளம் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும்.

தொழில்நுட்பங்களைத் தவறாகச் சிலர் பயன்படுத்தக்கூடும் என்பதால், அதைத் தடுக்கும் வகையிலும் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது” எனத் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x