Published : 05 Oct 2015 05:31 PM
Last Updated : 05 Oct 2015 05:31 PM
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் கிணற்றில் விழுந்த பசுங்கன்றை முஸ்லிம் இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இது சிறந்த, மதநல்லிணக்க சம்பவமாக பாராட்டப்படுகிறது.
லக்னோவில் இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து வாழும் பகுதிகளில் ஏஷ்பாக் பகுதியும் ஒன்று. இப்பகுதியில் சாலை ஓரத்தில் ஒரு கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் தரும் பிரசாதங் களை உண்பதற்காக பசுக்கள் சுற்றித் திரிவது வழக்கம். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பசுங்கன்று ஒன்று தவறுதலாக அங்குள்ள கிணற்றில் விழுந்து விட்டது. பசுக்களை புனிதமாக கருதுவால் அதை காப்பாற்றும் முயற்சியில் அப்பகுதியினர் தீவிரமாக இறங்கினர். இதற்காக வாடகைக்கு ஒரு கிரேனையும் வரவழைத்தனர். எனினும் சுமார் 25 அடி ஆழமுள்ள அந்தக் கிணறு மிகவும் பழமையானது என்பதால் அதில் எவரும் இறங்க முன்வரவில்லை.
இந்நிலையில் வேடிக்கை பார்க்க வந்தவர்களில், முகமது ஜகி என்ற 20 வயது இளைஞர் கிணற்றில் இறங்க தைரியமாக முன்வந்தார். இதையடுத்து கிரேனின் கொக்கியில் அமர்ந்தபடி கிணற்றில் இறங்கிய முகமது ஜகி, அங்கு தத்தளித்துக் கொண்டிருந்த பசுங்கன்றின் வயிற்றை சுற்றி துணியை கட்டினார். பிறகு மெல்ல அதை கொக்கியில் மாட்டினார். இதையடுத்து பசுங்கன்று மேலே தூக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது.
இதற்காக, ஜகியை அங்கு கூடியிருந்த மக்கள் பாராட்டி மகிழ்ந்தனர். இதை ஒருவர் தனது மொபைல் கேமராவில் வீடியோ எடுத்து அதை ‘வாட்ஸ் அப்’பில் பரவச் செய்தார். மேலும் தொலைக்காட்சி செய்திகளிலும் இது தொடர்ந்து ஒளிபரப்பானது.
சம்பவம் பற்றி அறிந்த லக்னோ மாவட்ட ஆட்சியர் ராஜ்சேகரும், ஜகியை பாராட்டினார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த இளைஞனுக்கு தலை வணங்குகிறேன்… லக்னோவின் மதநல்லிணக்கம் நீடூழி வாழ்க” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஜகி கூறும்போது, “கடந்த வெள்ளிக் கிழமை மதியம் நான் தொழுகைக் காக மசூதிக்கு செல்லும்போது கிணற்றில் பசுங்கன்று விழுந்தது தெரியவந்தது. அங்கிருந்தவர்கள் யாரும் கிணற்றில் இறங்க முன்வராததால் தொழுகைக்கு முன் ஓர் உயிரை காப்பாற்றலாம் என முடிவு செய்தேன். அந்த கிணற்றில் பாதி தூரம் இறங்கியபோது எனக்கு மூச்சு முட்டியது. இதையும் மீறி இறங்கி, மூழ்கிய நிலையில் இருந்த பசுங்கன்றை கட்டித் தூக்கியபோது அது எனது கால்களில் உதைத்தது தாங்க முடியாத வலியை தந்தது” என்றார்.
லக்னோவில் அன்றாடக் கூலிக்கு மரச்சாமான்கள் பாலிஷ் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ள ஜகி, கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் விடுப்பில் இருந்துள்ளார். இவரது தந்தை முகமது ரபீக்கும் அப்பகுதியில் கூலி வேலை செய்துவருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT