Last Updated : 11 Dec, 2020 09:29 PM

6  

Published : 11 Dec 2020 09:29 PM
Last Updated : 11 Dec 2020 09:29 PM

அரசு ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு; கதர் ஆடை கட்டாயம்; டி- சர்ட், ஜீன்ஸ் பேன்ட், ரப்பர் காலணிகளுக்குத் தடை: மகாராஷ்டிர அரசு அதிரடி

பிரதிநிதித்துவப் படம்.

மும்பை

அரசு ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள மகாராஷ்டிர அரசு, ஜீன்ஸ், டி- சர்ட், சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்துக்கு வருவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் அந்தப் பதவிக்குத் தகுதியான ஆடைகளை அணிய வேண்டும். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகம் வரக்கூடாது என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த 8-ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மாநில அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்து அரசு ஊழியர்களும் வாரத்தில் ஒருநாள் குறைந்தபட்சம் வெள்ளிக்கிழமையன்று கண்டிப்பாக கதர் ஆடைகளை, கைத்தறி ஆடைகளை அணிந்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடைக் கட்டுப்பாடுகள் அரசுப் பணியில் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டும்தான். ஒப்பந்த அடிப்படையில், அரசுக்கு ஆலோசகர்களாகப் பணியாற்றுவோருக்கு இது பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே அரசு ஊழியர்களுக்கான மதிப்பு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஆதலால், அவர்கள் மத்தியில் நல்ல நடத்தையை ஏற்படுத்தவும், ஆடையில் ஆளுமைத் திறனை உண்டாக்கவும் இந்த ஆடைக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும், சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டும். சுத்தமில்லாத அழுக்கான ஆடைகளை அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறான ஆடைகள் வேலைத்திறனைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஊழியர்கள் புடவை, சுடிதார், சல்வார் அணிந்து வரலாம். பேன்ட், சட்டை, தேவைப்பட்டால் ஷால் அணிந்து வரலாம்.

ஆண் ஊழியர்கள் கண்டிப்பாக பேன்ட், சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும். அடர் வண்ணத்தில் ஆடைகள், பளிச்செனத் தெரியும் ஆடைகள், டிசைனில் உள்ள ஆடைகளை அலுவலகத்துக்கு அணிந்து வரக்கூடாது. ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் போன்றவற்றை அரசு ஊழியர்கள் பணியின்போது அணிந்து வரக்கூடாது.

பெண் ஊழியர்கள் காலணிகள், சாண்டல்கள், ஷூ அணியலாம். ஆண் ஊழியர்கள் சாண்டல்கள், ஷூ மட்டுமே அணிய வேண்டும். சாதாரண ரப்பர் காலணிகளை அணியக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x