Published : 11 Dec 2020 08:38 PM
Last Updated : 11 Dec 2020 08:38 PM
மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படையினருக்கு (சிஏபிஎப்) வார விடுமுறை அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சி செய்வதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அனைத்து சிஏபிஎப் அதிகாரிகளிடம் தற்போதுள்ள விடுமுறைகள் மீதான பட்டியலைப் பெற்று அமித் ஷா ஆலோசனை செய்துள்ளார்.
துணை ராணுவப் படையான சிஏபிஎப் பிரிவுகளாக இருப்பது சிஆர்பிஎப், பிஎஸ்எப், ஐடிபிபி மற்றும் சிஐஎஸ்எப் ஆகியன. இதன் வீரர்கள் நாட்டின் எல்லைகள் உள்ளிட்ட முக்கியப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்குப் போதுமான பணி விடுப்பு கிடைப்பதில்லை என்ற புகார் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால், அவர்களில் சிலர் தன் பணியின்போது பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுகின்றனர்.
இதைத் தடுக்க கடந்த வருடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிஏபிஎப் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இதையடுத்து அனைத்து வீரர்கள் மற்றும் அதிகாரிகள் வருடந்தோறும் குறைந்தபட்சம் 100 நாட்களாவது தம் குடும்பத்துடன் நாட்களைக் கழிக்கும்படி திட்டம் அமைக்க அமித் ஷா விருப்பம் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு வார விடுமுறை அளிக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்துப் படைப் பிரிவுகளின் தலைமை அலுவலகங்களில் இருந்து கடந்த மூன்று வருடங்களில் அவர்களால் எடுக்கப்பட்ட விடுமுறை மீதான தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
அவர்களுக்கு விடுமுறைகள் அளிப்பதில் உயர் அதிகாரிகளின் கவனக்குறைவு உள்ளதா எனவும் பரிசீலிக்கப்பட உள்ளது. இவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அனைவருக்கும் வார விடுமுறை அளிக்கும் முயற்சி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் எடுக்கப்படுகிறது.
இந்த முறை மற்ற மத்திய படைகளின் பிரிவினருக்கும் அமலாக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மீதான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT