Last Updated : 11 Dec, 2020 08:02 PM

6  

Published : 11 Dec 2020 08:02 PM
Last Updated : 11 Dec 2020 08:02 PM

மோதல் முற்றுகிறது; மத்திய அரசின் உத்தரவுக்குப் பணிய மம்தா மறுப்பு: தலைமைச் செயலாளர், டிஜிபியை டெல்லிக்கு அனுப்பத் தயாரில்லை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: கோப்புப் படம்.

கொல்கத்தா

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டது குறித்தும், சட்டம்- ஒழுங்கு குறித்தும் வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால், அந்த சம்மனை ஏற்று, தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி இருவரையும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப் போவதில்லை என்று மம்தா பானர்ஜி அரசு முடிவு செய்துள்ளது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். கொல்கத்தாவிலிருந்து டைமண்ட் ஹார்பர் தொகுதிக்குச் சென்றபோது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நட்டாவின் பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர் என்று பாஜக சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இதையடுத்து, நட்டாவுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டதில் என்னவிதமான குறைபாடு நடந்துள்ளது, நடந்த சம்பவங்கள் என்னென்ன, பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, கற்களை எறிந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது.

மேலும், மேற்கு வங்கத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்து விரிவாக ஓர் அறிக்கையும், அரசியல் வன்முறை தொடர்பாக மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து விரிவாகத் தனியாக ஓர் அறிக்கையையும் மத்திய அரசுக்கு ஆளுநர் ஜெகதீப் தனகர் நேற்று அனுப்பி வைத்தார்.

ஆளுநர் அறிக்கையைப் பெற்ற சில மணி நேரத்தில், வரும் 14-ம் தேதி மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், டிஜிபி இருவரும் நேரில் ஆஜராகி சட்டம்- ஒழுங்கு நிலைமை குறித்தும், நட்டா கார் மீது தாக்குதல் நடந்த விவகாரம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், இந்த சம்மனை ஏற்று தலைமைச் செயலாளர், டிஜிபி இருவரையும் டெல்லிக்கு வரும் 14-ம் தேதி அனுப்பிவைக்கப் போவதில்லை என மம்தா பானர்ஜி அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் அலாபன் பந்தோபத்யாயே, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:

“வரும் 14-ம் தேதி மாநில அரசு சார்பில் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. மாநில அரசின் அந்த உத்தரவுக்கு நான் பணிந்து நடக்க வேண்டும்.

மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு தொடர்பாகவும், இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ளோருக்கு பாதுகாப்புக் குறைபாடுகளில் நடந்த சம்பவம் தொடர்பாகவும் வரும் 14-ம் தேதி 12.15 மணிக்கு மாநிலத்தின் தலைமைச் செயலாளரையும், டிஜிபியையும் நேரில் ஆஜராகக் கூறினீர்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கைகள் பெறப்பட்டு, தொகுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலவரம் தொடர்பாக மாநில அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து அதைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆதலால், மாநில அரசு சார்பில் நடக்கும் கூட்டத்தில் நான் பங்கேற்க வேண்டும் என்பதைப் பணிவுடன் தெரிவிக்கிறேன். ஆதலால், வரும் 14-ம் தேதி உங்கள் சம்மனை ஏற்று நான் நேரில் வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுகிறேன்.

மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க கடந்த 10-ம் தேதி மாநிலத்துக்கு வந்த ஜே.பி.நட்டாவுக்கு தேவையான விரிவான பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்பட்டன.

மாநில அரசு சார்பில் பாதுகாப்பு வாகனங்கள், சிஆர்பிஎப் பாதுகாப்பு ஆகியவை அளிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், 4 கூடுதல் ஏஎஸ்பி, 8 டிஎஸ்பி, 14 காவல் ஆய்வாளர்கள், 70 துணை ஆய்வாளர்கள், 40 ஆர்ஏஎப் படையினர், 259 காவலர்கள், 350 போலீஸார் என டைமண்டர் ஹார்பர் பகுதிக்குச் செல்லும் வழியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்கள்.

மத்திய அரசு சார்பில் தனியாக பாதுகாப்பு வசதிகள் நட்டாவுக்கு செய்யப்பட்டு இருந்தாலும், அந்தப் பாதுகாப்புக்கு மேலாக மாநில அரசு சார்பில் கூடுதல் கண்காணிப்பு வசதிகள் செய்யப்பட்டன.

விஐபிக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வரும் பாதுகாவலர்கள் சில வாகனங்களில் வந்துதான் கையாள வேண்டும். பல வாகனங்களில் வந்து பாதுகாப்பைக் கையாள்வது கடினமாகும். பாதுகாப்பு வாகனங்கள் மீது கல் வீசி எறிந்த சம்பவத்தில் 7 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன''.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x