Published : 11 Dec 2020 07:14 PM
Last Updated : 11 Dec 2020 07:14 PM
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பாரதிய கிசான் யூனின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி-ஹரியாணா எல்லைப் பகுதிகளான திக்ரி, காஜிபூர், டெல்லி-நொய்டா எல்லையான சில்லா ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரிலும் வெளியிலும் போராட்டம் நடத்தி வருவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தீர்மானமாக உள்ளனர்.
வரும் 14-ம் தேதிக்குப் பின் நாடு முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் விவசாயிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அரசியலமைப்புச் சட்டரீதியாக செல்லுபடியாகுமா எனக் கோரியும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. மனோஜ் ஜா, திமுக எம்.பி. திருச்சி சிவா, சத்தீஸ்கர் காங்கிரஸ் விவசாய சங்கத்தின் சார்பில் ராகேஷ் வைஷ்ணவ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு கடந்த அக்டோபர் 12-ம் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மதுராவைச் சேர்ந்த பாரதிய கிசான் யூனியன் சார்பில், வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களோடு தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை வழக்கறிஞர் ஏ.பி.சிங் மூலம் பாரதிய கிசான் யூனியன் தாக்கல் செய்தது. அந்த மனுவில், “இந்தச் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் போராசைக்கு விவசாயிகளை ஆளாக்குகின்றன. வேளாண்மையை வணிகமயமாக்கி, ஒப்பந்த முறையில் மாற்றுவதற்கு இந்தச் சட்டங்கள் உதவுகின்றன.
இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் போதுமான விவாதங்கள் இன்றி, அவசரமாக நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளுக்குப் பணம் ஈட்டுவதற்கு வழிகாட்டுவதன் மூலம் நீண்டகாலமாக வேளாண்மையில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT