Published : 11 Dec 2020 02:42 PM
Last Updated : 11 Dec 2020 02:42 PM
பிஹாரில் குறைவாக வருமானம் ஈட்டும் விவசாயிகளைப் போல் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் வருமானத்தையும் குறைக்க மத்திய அரசு விரும்புகிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் குறைந்துவிடும், குறைந்தபட்ச ஆதார விலையை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும், ஏபிஎம்சி சட்டத்தையும் ரத்து செய்துவிடும் என்று காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ட்விட்டரில் நாளேடு ஒன்றின் செய்தியைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
அந்த நாளேட்டில் வெளியாகியுள்ள ஆய்வில், “இந்திய விவசாயிகளின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.77 ஆயிரத்து 124 ஆக இருக்கிறது. ஆனால், பஞ்சாப் விவசாயிகளின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 708 ஆக இருக்கிறது. பிஹாரில் உள்ள விவசாயிகளின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.42 ஆயிரத்து 684 என தேசிய சராசரிக்கும் குறைவாக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நாட்டில் பஞ்சாப்பில் உள்ள விவசாயிகள்தான் ஓராண்டில் அதிகமாக வருமானம் ஈட்டுகிறார்கள். பிஹார் விவசாயிகள் தேசிய சராசரிக்கும் குறைவாக வருமானம் பெறுகிறார்கள்.
பஞ்சாப் விவசாயிகளைப் போல் தங்களின் வருவாயும் அதிகரிக்கவே விவசாயிகள் விரும்புவார்கள். ஆனால், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் வருமானமும், பிஹார் விவசாயிகளைப் போலவே குறைவாக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது” என விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT