Published : 11 Dec 2020 12:56 PM
Last Updated : 11 Dec 2020 12:56 PM
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, மாநிலத் தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோர் வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர் அலாபன் பந்தயோபத்யாயே, காவல் டிஜிபி வீரேந்திரா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று மேற்கு வங்க அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். கொல்கத்தாவிலிருந்து டைமண்ட் ஹார்பர் தொகுதிக்குச் சென்றபோது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நட்டாவின் பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர் என்று பாஜக சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், பாஜக மூத்த தலைவர் விஜய் வர்கியாவும் தாக்குதலில் காயமடைந்தார் என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நட்டாவுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டதில் என்னவிதமான குறைபாடு நடந்துள்ளது, நடந்த சம்பவங்கள் என்னென்ன, பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, கற்களை எறிந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மேற்கு வங்க அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விரிவாக ஓர் அறிக்கையும், அரசியல் வன்முறை தொடர்பாக மாநில அரசின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாகத் தனியாக ஓர் அறிக்கையையும் மத்திய அரசுக்கு ஆளுநர் ஜெகதீப் தனகர் நேற்று அனுப்பி வைத்தார்.
ஆனால், பாஜக தலைவர் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டது குறித்தும், பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்ட பின்பும், மாநில அரசு சார்பில் எந்தவிதமான அறிக்கையும் அனுப்பி வைக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஆளுநர் ஜெகதீப் அனுப்பிய மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சம் பெற்றுக்கொண்டதாகவும், அது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் வரும் 14-ம் தேதி மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், காவல் டிஜிபி இருவரும் நேரில் ஆஜராகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலையில், அரசியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு வன்முறைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளரும், டிஜிபியும் மத்திய அரசிடம் விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் ஜெகதீப் அளித்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட சில மணி நேரங்களில், மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT