Published : 11 Dec 2020 12:55 PM
Last Updated : 11 Dec 2020 12:55 PM
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சரத் பவார் நியமிக்கப்படுவதாக வெளியான தகவலை முற்றிலுமாக காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. அவ்வாறு எந்தவிதமான பேச்சும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஒரு நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் காங்கிரஸ் சாராத கட்சிகள் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்றும், ராகுல் காந்தி தேசத்தை வழிநடத்தும் அளவுக்கு பக்குவப்படவில்லை என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதற்கேற்ப, காங்கிரஸ் கட்சியில் உள்கட்சித் தேர்தலுக்கான பணிகளும் தீவிரமடைந்து வருவதால், யுபிஏ கூட்டணி தலைமைப் பதவியில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்று ஊகிக்கப்பட்டது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியில் இருக்கும் உறுப்பினர் ஒருவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை நியமிக்கப் பேச்சு நடந்து வருவதாகத் தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.
இந்தத் தகவல் குறித்த உண்மைகளை அறிந்துகொள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டியின் முக்கிய உறுப்பினர் தாரிக் அன்வரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது
"எனக்குத் தெரிந்தவரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார். அவருக்குப் பதிலாக யாரையும் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காங்கிரஸ் என்பது மிகப் பெரிய கட்சி. இயல்பாகவே காங்கிரஸ் தலைவர்தான் யுபிஏ கூட்டணியின் தலைவராகவும் இருப்பார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வேறு தலைவர் வரப்போகிறார் எனும் தகவல் எல்லாம் யாரோ சிலர் வதந்திகளை உருவாக்கி பரப்பிவிடுவதுதான். தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்ப ஏதாவது செய்ய வேண்டும்”.
இவ்வாறு தாரிக் அன்வர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்புரீதியான தேர்தல் நடந்து அதில் காங்கிரஸ் கட்சிக்கு வேறு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், நிச்சயம் சோனியா காந்தி தலைவர் பதவியிலிருந்து விலக நேரிடும். அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வலுவான தலைவர் ஒருவர் தேவை.
அந்தவகையில் பார்த்தால், அரசியல் அனுபவமும், வலிமையான தலைமையும் கொண்டவராக சரத் பவார் மட்டுமே இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தலுக்கான பணிகள் இந்த மாதத்தில் முடிந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்துக்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் குறித்து மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “உட்கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட்டால், வேறு போட்டி வேட்பாளர் யாரும் இருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். ஆனால், வேறு வேட்பாளர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால், நிலைமை வேறுவிதமாக இருக்கும். யுபிஏ கூட்டணித் தலைவராக சரத் பவார் வருவதாக எந்தத் தகவலும் எங்களுக்கு வரவில்லை” எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மகேஷ் டாப்ஸே கூறுகையில், “ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சரத் பவார் வரப்போகிறார் என்று ஆதாரமில்லாத செய்திகளை வெளியிடுகிறார்கள். அதுபோன்று எந்த ஆலோசனையும், யாருடனும் நடத்தவில்லை. திட்டமும் இல்லை என்பதை தேசியவாத காங்கிரஸ் கூறி தெளிவுபடுத்துகிறது. விவசாயிகள் போராட்டத்தைத் திசைதிருப்ப இதுபோன்ற கதைகளைப் பரப்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT