Last Updated : 11 Dec, 2020 11:51 AM

4  

Published : 11 Dec 2020 11:51 AM
Last Updated : 11 Dec 2020 11:51 AM

இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில்பாதை

பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா | கோப்புப் படம்.

புதுடெல்லி

வங்கதேசத்திற்கு செல்லும் ரயில்பாதை மீண்டும் 55 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட உள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தை வரும் டிசம்பர் 17 அன்று பிரதமர் மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் திறந்துவைப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வடகிழக்கு எல்லை ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுபனன் சந்தா கூறியதாவது:

1965 -ம் ஆண்டு சண்டையிலிருந்து, இந்தியாவிற்கும் பின்னர் கிழக்கு பாகிஸ்தான் இடையிலான ரயில் இணைப்புகள் முறிந்தது. அதிலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹால்திபரி முதல் வடக்கு வங்கதேசத்தின் சிலாஹதி வரையிலான ரயில் பாதை செயலிழந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் ஹால்திபரி மற்றும் அண்டை நாடான வங்கதேசத்தின் சிலாஹதி ஆகியவற்றுக்கு இடையேயான ரயில் பாதை டிசம்பர் 17 -ம் தேதி 55 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் டிசம்பர் 17 ஆம் தேதி ஹல்திபரி-சிலாஹதி ரயில் பாதையை தொடங்கவைப்பார்கள். அதனைத் தொடர்ந்து சிலாஹதியில் இருந்து ஹால்திபரி வரை ஒரு சரக்கு ரயில் இயக்கப்படும். ஹால்திபரி, வடகிழக்கு ரயில்வேயின் கதிஹார் கோட்டத்தில் உள்ள முக்கியமான ரயில்நிலையம் ஆகும்.

இவ்வாறு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.

ரயில் பாதையை மீண்டும் திறக்கும் முடிவை வெளிவிவகார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுக்கு அறிவித்ததாக கத்திஹார் பிரதேச ரயில்வே மேலாளர் ரவீந்தர் குமார் வர்மா தெரிவித்தார்.

ஹால்திபரி ரயில் நிலையத்திலிருந்து சர்வதேச எல்லை வரை இடையேயான தூரம் 4.5 கிலோமீட்டர் ஆகும், வங்கதேசத்தின் சிலாஹதியிலிருந்து அதன் இந்திய எல்லை வரை 7.5 கிலோமீட்டர் வரை இருக்கும் என்று என்எஃப்ஆர் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹால்திபரி மற்றும் சிலாஹதி நிலையங்கள் இரண்டும் சிலிகுரி மற்றும் கொல்கத்தா இடையேயான பழைய அகல பாதை ரயில் பாதையில் இருந்தன, அவை இன்றைய வங்கதேசத்தின் பகுதிகள் வழியாக சென்றன.

இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை தொடங்கும் போது, ​​மக்கள் சிலிகுரிக்கு அருகிலுள்ள ஜல்பைகுரியிலிருந்து கொல்கத்தாவுக்கு ஏழு மணி நேரத்தில் பயணிக்க முடியும், இப்போது எடுக்கும் நேரத்தை விட ஐந்து மணி நேரம் குறைவாக இருக்கும் என்று வர்மா புதன்கிழமை ஹால்திபரி நிலையத்திற்கு வருகை தந்த பின்னர் கூறினார்.

கவுகாத்தியில் உள்ள மாலிகானை தலைமையிடமாகக் கொண்ட வடகிழக்கு மண்டலம், முழு வடகிழக்கு பகுதியையும் பிஹார் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x