Published : 11 Dec 2020 09:28 AM
Last Updated : 11 Dec 2020 09:28 AM
பாதுகாப்பு படையினர் உபயோகத்துக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) தயாரித்த, கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கிப் பரிசோதனை முழு வெற்றி பெற்றுள்ளது.
ராணுவத்தின் தேவைகளுக்குத் தகுந்தபடி 5.56 X 30 எம்எம் அளவுள்ள குண்டுகளைப் பயன்படுத்தும் கார்பைன் ரக தானியங்கி துப்பாக்கியை, புனேவில் உள்ள டிஆர்டிஓ பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் வடிவமைத்தது.
இந்தத் துப்பாக்கி கான்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையிலும், இதற்கான குண்டுகள் புனேயில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையிலும் தயாரிக்கப்பட்டது. 3 கிலோ எடையுள்ள இந்தத் துப்பாக்கியால் 100 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் சுட முடியும். நேரத்தியான வடிவமைப்பில், ஒரு கையால் சுடும் அளவுக்கு இந்த கார்பைன் ரக துப்பாக்கி தயாரிக்பப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கி கோடையில் மிக அதிகமான வெப்பநிலையிலும், குளிர்காலத்தில் மிக உயரமான மலைப் பகுதியிலும் சோதித்து பார்க்கப்பட்டதில், இதன் சுடும் திறன் மிகத் துல்லியமாக இருந்தது. இதன் இறுதி கட்டப் பரிசோதனை கடந்த 7ம் தேதி வெற்றிகரமாக முடிந்தது. இதனால் இந்தத் துப்பாக்கி, படையில் விரைவில் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. இந்தத் துப்பாக்கிக்கான, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசோதனைகள் முடித்து விட்டன. இவற்றை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை, மத்திய ஆயுதப்படை, மாநில போலீஸ் அமைப்புகள் தொடங்கியுள்ளன.
லக்னோவில் சமீபத்தில் நடந்த ராணுவக் கண்காட்சியில் இந்த 5.56 X 30 எம்எம் ரக கார்பைன் துப்பாக்கியை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார்.
இந்தத் துப்பாக்கியின் பரிசோதனைகள் வெற்றி பெற்றதற்காக, டிஆர்டிஓ குழுவினருக்கு அதன் தலைவர் சதீஷ் ரெட்டி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT