Last Updated : 11 Dec, 2020 07:29 AM

 

Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM

காங்கிரஸ், மஜத கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்ட மசோதா நிறைவேற்றம்: தடையை மீறினால் 7 ஆண்டு சிறை, ரூ. 10 லட்சம் அபராதம்

கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ், மஜதவின் கடும் எதிர்ப்பை மீறி, பசுவதை தடுப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2010-ம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, பசுவதை தடுப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அந்த மசோதா திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்,பசுவதை தடுப்பு சட்டத்தை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியது. இதையடுத்து, கர்நாடக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு சவுஹான், இந்த சட்டத்தை செயல்படுத்துவது குறித்து உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

இந்த சூழலில், நேற்று முன் தினம் கர்நாடக சட்டப்பேரவையில் பசுவதை தடுப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பு பசுவை சட்டபேரவையின் நுழைவாயிலில் நிற்கவைத்து சிறப்பு பூஜை செய்தார். பின்னர் மாலையில், சட்டப்பேரவையில் பசுவதை தடுப்பு சட்ட மசோதாவை அமைச்சர் பிரபு சவுஹான் தாக்கல் செய்ய முயன்றபோது காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறுகையில், “இது ஜனநாயகத்துக்கும், சட்டப்பேரவையின் மாண்புக்கும் எதிரானது. இந்த சட்ட மசோதா குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. ஆனால், பாஜக அரசு சதி திட்டத்தோடு இந்த மசோதாவை திடீரென தாக்கல் செய்திருக்கிறது. அதனை ஏற்க முடியாது. அதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என தெரிவித்தார். காங்கிரஸை தொடர்ந்து, மஜத எம்எல்ஏக்களும் பசுவதை தடுப்பு சட்ட மசோதாவை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

பசுவதை தடுப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு சவுஹான் பேசியதாவது:

அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிறகே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் மூலம் பசுவை இறைச்சிக்காக கொல்வதும், அதன் இறைச்சியை ஏற்றுமதி செய்வதும் தடுக்கப்படுகிறது.

இதை மீறுவோருக்கு புதிய சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும். பசுவை துன்புறுத்துவோருக்கு ரூ. 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும் எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவில் பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வரையா ஹெக்டே காகேரி குரல் வாக்கெடுப்பு நடத்தி, பசுவதை தடுப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x