Published : 10 Dec 2020 10:52 AM
Last Updated : 10 Dec 2020 10:52 AM
மேற்கு வங்கத்தில் 10 ஆண்டுகால மம்தா பானர்ஜி ஆட்சியின் ரிப்போர்ட் கார்டு இன்று வெளியிடப்பட உள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி முதன்முதலாக 2011 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. மேற்குவங்கத்தின் 34 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சியை முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையினலான திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றி 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவையைக் கருத்தில்கொண்டு, திரிணமூல் காங்கிரஸ் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திரிணமூல் கட்சியில் சில முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த பத்து ஆண்டுகளில் மம்தா பானர்ஜி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாநில மக்களுக்கு தெரிவிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த ரிப்போர்டு கார்டு.
ஆட்சியின் சாதனைகள் குறித்து 'ரிப்போர்ட் கார்டு' வெளியிடுவது என்பது 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சியால் நியமிக்கப்பட்ட தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் சிந்தனையாகும்.
'டி.எம்.சி ரிப்போர்ட் கார்டு - பத்து ஆண்டு வளர்ச்சி' வெளியீட்டு நிகழ்வில் மேற்கு வங்கத்தின் பத்து ஆண்டுகால வளர்ச்சியை விரிவாகக் கூறும் நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.
மாநில அரசு முன்னெடுத்த பல்வேறு கொள்கைகள் மற்றும் அதன் சாதனைகள் குறித்து ரிப்போர்ட் கார்டு வெளியீட்டின் போது விவாதிக்கப்படும்.
கடந்த பத்து ஆண்டுகளில் நாங்கள் என்ன செய்தோம் என்பதையும், ஆட்சியை மேம்படுத்த மம்தா அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் உண்மைத்தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களை ரிப்போர்ட் கார்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு திரிணமூல் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT