Published : 10 Dec 2020 09:17 AM
Last Updated : 10 Dec 2020 09:17 AM
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சர் உசைன் பின் இப்ரஹிம் அல் ஹம்மதி-உடன் காணொலி வாயிலான கூட்டத்தில் இன்று கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் தேசிய ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சர் உசைன் பின் இப்ரஹிம் அல் ஹம்மதி, தேசிய கல்வி கொள்கை 2020-ஐ வெகுவாகப் பாராட்டியதோடு, மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ஆவணமாக இந்தக் கொள்கை திகழ்வதாகக் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொக்ரியால், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை, கல்வி முறையை முழுவதுமாக மாற்றும் வகையிலும், சர்வதேச தரத்துக்கு இணையானதாகவும் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
மாணவர்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து, தங்களுக்கு வேண்டிய பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்யும் வகையில் இந்தக் கொள்கை அமைந்திருப்பதாக அவர் கூறினார். எளிதில் அணுகத்தக்க, சமமான, தரமான, குறைந்த செலவில், பொறுப்புடைமையுடன் கூடிய கல்வியை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு இடையே கல்வித்துறையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இருநாடுகளின் உயர் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொதுக்கல்வி இணை அமைச்சர் ஜமீலா அல்முஹைரி, இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் டாக்டர் அகமது அப்துல் ரஹ்மான் அல்பன்னா உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT