Published : 10 Dec 2020 08:57 AM
Last Updated : 10 Dec 2020 08:57 AM
வடகிழக்கு மாநிலங்களுக்கான விரிவான தொலைத்தொடர்பு திட்டம் மற்றும் அருணாச்சல பிரதேசம், அசாமின் 2 மாவட்டங்களுக்கு கைபேசி சேவை வழங்கும் உலகலாவிய சேவை உதவி நிதித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வடகிழக்கு மாகாணத்துக்கான விரிவான தொலைத்தொடர்பு திட்டத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேசம், அசாமின் கர்பி அங்லாங் மற்றும் திமா ஹசாஓ ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு கைபேசி சேவை வழங்கும் உலகலாவிய சேவை உதவி நிதித் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை கைபேசி சேவை இல்லாத 2374 கிராமங்களுக்கு (அருணாச்சலப் பிரதேசத்தில் 1683, அசாமின் இரண்டு மாவட்டங்களில் 691), ரூ. 2,029 கோடியில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் சேவைகள் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கான நிதியை, உலகலாவிய சேவை உதவி நிதியம் என்ற அமைப்பு வழங்கும். 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்திலும், அசாமின் தொலைதூரப் பகுதிகளிலும் கைபேசி சேவை வழங்கப்படுவதன் மூலம் அந்தப் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை, மின் ஆளுகை போன்ற துறைகளில் டிஜிட்டல் இணைப்பு மேம்படுத்தப்படுவதோடு உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் தற்சார்பு இந்தியாவின் குறிக்கோளையும் பூர்த்தி செய்ய முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT