Published : 09 Dec 2020 08:18 PM
Last Updated : 09 Dec 2020 08:18 PM
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்திய அரசுடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளன. இதன் எதிரொலியாக நாடு முழுவதிலும் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த இருப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களுக்கு உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், டெல்லி மற்றும் பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஆதரவு கிடைத்து வருகிறது.
மத்திய அரசின் புதிய மூன்று விவசாய மசோதாக்கள் எதிர்ப்பு இந்த போராட்டத்தின் முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. இதன் மீது மத்திய அரசுடன் விவசாயிகள் இதுவரை நடத்திய ஆறு பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துள்ளனர்.
இதில், கடைசியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதை தொடர்ந்து அரசு தரப்பில் மாற்றம் செய்யத் தயாராக இருப்பதாக 19 பக்க பரிந்துரை கடிதம் இன்று காலை விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இதை முழுமையாக ஏற்க மறுத்த விவசாயிகள் தம் போராட்டத்தை தேசிய அளவில் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். படிப்படியாக பல்வேறு வகை போராட்டங்களை இதில் அறிவித்துள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் விவசாயிகள் போராட்டக் குழுவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.தர்ஷண்பால் கூறும்போது, ‘மத்திய அரசின் பரிந்துரைகள் முற்றிலுமாக ஏற்கப்படவில்லை. டிசம்பர் 14 முதல் நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களில் சாலை மறியல் நடத்துவோம்.
அதற்கு முன்பாக 12 -ம் தேதி டெல்லி-ஜெய்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மறித்து ஆர்பாட்டம் நடத்துவோம். அதேசமயம், நாடு முழுவதிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவோம்.
பஞ்சாபில் இழுத்து மூடியதை போல், நாடு முழுவதிலும் உள்ள ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களின் ஷாப்பிங் மால்கள் மீது நடவடிக்கைகள் இருக்கும்.’ எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு அனுப்பிய பரிந்துரையில் சாதகமான சில அம்சங்கள் இருந்தும் அதை விவசாயிகள் முற்றிலும் புறக்கணித்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதற்கு தமது கோரிக்கைகள் அனைத்தையும் முற்றிலும் அரசு ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் வளர்ந்திருப்பது காரணம் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT