Published : 09 Dec 2020 04:44 PM
Last Updated : 09 Dec 2020 04:44 PM
சாலை வசதியற்ற தொலைதூர காஷ்மீர் கிராமங்களுக்கு ரேஷன், மருந்துப் பொருட்களை நேரில் சென்று விநியோகிக்கும் பணியில் இந்திய ராணுவம் இன்று ஈடுபட்டது.
ரம்பன் மாவட்டத்தைச் சேர்ந்த உயர்ந்த மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ராணுவ வீரர்கள் 'கரோனா முக்ட் அவாம்' திட்டத்தின் மூலம் ரேஷன் உள்ளிட்ட உதவிகள் வழங்கியதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் மற்றும் மருந்துப் பொருட்களைச் சுமந்து செல்லும் ஜவான்களின் படங்களைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
"இந்தியக் குடிமக்களாகிய நமக்கு சும்பர், தக்னரி, பாஞ்ச், பஜோன் மற்றும் மல்பட்டி ஆகிய கிராமங்கள் எங்கே உள்ளன என்று தெரியுமா? இந்த கிராமங்கள் ஜம்மு-காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தின் பின்தங்கிய, தொலைதூர மற்றும் உயர்ந்த மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன.
தற்போது ரம்பன் மாவட்டத்தின் இத்தகைய சில கிராமங்கள் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டுள்ளன. இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தொலைதூரம் காரணமாக அடிப்படை வசதிகள் இன்றி நீண்டகாலமாகவே வசித்து வருகின்றனர். சாலை இணைப்பு இல்லாததால் கிராம மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அரசுக்கும் கடினமான பணியாகவே இருந்து வந்துள்ளது.
இங்கே நாங்கள் பகிர்ந்துள்ள படங்களில் உயர்ந்த மலைக் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான ரேஷன், மருந்துப் பொருட்களை இந்த ராணுவ வீரர்கள் கொண்டுசெல்வதை உங்களால் காண முடிகிறதா?
உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில், இந்திய ராணுவம் அரசின் 'கரோனா முக்ட் அவாம்!' திட்டத்தின் மூலம் இந்தப் பகுதிகளில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு இதுவரை ரேஷன் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகித்துள்ளது.
இவ்வாறு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT