Published : 09 Dec 2020 08:37 AM
Last Updated : 09 Dec 2020 08:37 AM
வேளாண் சட்டங்கள் எதிர்ப்புப் போராட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இன்றைய பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு கடந்த செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது இருதரப்புமே தங்களது நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்ததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அரசுத் தரப்பில் சில திருத்தங்களை மேற்கொள்வதாகக் கூறப்பட்டது. ஆனால், விவசாயிகள் சங்கங்களோ 3 வேளாண் சட்டங்களையும் முற்றிலுமாக திரும்பப்பெற வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்தன. இதனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. மேலும், இன்று வேளாண் அமைச்சர் நரேஷ் தோமருடன் நடைபெறவிருந்த 6-ம் கட்டப் பேச்சுவார்த்தையும் ரத்தாகியுள்ளது.
முன்னதாக, நேற்றைய ஆலோசனையின் போது அரசுத் தரப்பில் வேளாண் சட்டங்களில் என்னென்ன திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பான அறிக்கை விவசாயச் சங்கப் பிரதிநிதிகளிடம் அளிக்கப்பட்டது.
அனைத்திந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் ஹனான் மொல்லா கூறுகையில், அரசு அளித்துள்ள சட்டத் திருத்த பரிந்துரைகள் தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றார். சிங்கு எல்லையில் இன்று நன்பகல் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம் 10 நாட்கள் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிய கிசான் சங்கம் வரவேற்பு:
இதற்கிடையில், வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளவிருப்பதாக அரசு பட்டியலிட்டுள்ள திருத்தங்கள் வரவேற்கத்தக்க நிலையில் இருப்பதாக பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திக்காய்த், பேச்சுவார்த்தை நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நாளை அரசு அளித்த பரிந்துரைகள் மீது விவசாயிகள் சங்கம் ஆலோசனை நடத்தும். அடுத்த பேச்சுவார்த்தை எப்போது எனத் தெரியவில்லை. ஆனால், எங்களின் போராட்டம் தொடரும் என்றார்.
குடியரசுத் தலைவருடன் சந்திப்பு:
இதற்கிடையில், எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி, சரத் பவார் உள்ளிட்ட 5 பேர் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்கள். கரோனா அச்சுறுத்தலால் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT