Published : 08 Dec 2020 06:41 PM
Last Updated : 08 Dec 2020 06:41 PM
2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் சேவை வழங்க தேசிய பிராட்பேண்ட் இயக்கம் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020-ஐ காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். “உள்ளடக்கிய புத்தாக்கம்- திறன்மிகுந்ததும், பாதுகாப்பானதும், நிலையானதுமானது” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். பிரதமரின் தொலைநோக்கான ‘தற்சார்பு இந்தியா’, ‘டிஜிட்டல் உள்ளடக்கம்’, ‘நீடித்த மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் புதுமை' ஆகியவற்றை ஊக்குவிப்பது இந்த மாநாட்டின் நோக்கமாகும். அந்நிய, உள்நாட்டு முதலீடுகளை அதிகரிப்பது, தொலைத்தொடர்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி, மேம்பாடுகளை ஊக்குவிப்பது ஆகியவற்றையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பம் மேம்படும் நிலையில், செல்போன்கள் மற்றும் சாதனங்களை அடிக்கடி மாற்றும் கலாச்சாரம் உருவாகி வருவது குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், கோவிட்- 19 பெருந்தொற்று காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பமும், மெய்நிகர் தகவல் தொடர்பு சாதனங்களும் பெருமளவு பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறினார். 85% தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் வீடுகளிலிருந்து மேற்கொள்ளப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
டிஜிட்டல் உள்ளடக்கத்தை நோக்கி மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசுகையில், நாட்டிலுள்ள 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிவிரைவு பிராட்பேண்ட் சேவை வழங்கும் பாரத் நெட் 2020 திட்டம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் சேவை வழங்கும் தேசிய பிராட்பேண்ட் இயக்கம் குறித்தும் அமைச்சர் பேசினார்.
செல்போன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையின் மூலம் உலக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கி, ஏற்றுமதி செய்யுமாறு உற்பத்தியாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரும் வாய்ப்பு இருப்பதாகக் கூறிய அவர், செயற்கை நுண்ணறிவை மக்களுக்கு அதிகாரம் அளிக்கவும், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்தவும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, தொழில்துறை, அரசு, கல்வி, இதர பங்குதாரர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து எதிர்காலத்திற்குத் தேவையான புதிய தீர்வுகள் குறித்து விவாதிக்கும் முன்னணி தளமாக இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020 விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தொலைத்தொடர்புத் துறை தலைவரும், செயலாளருமான அன்ஷூ பிரகாஷ், இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கத்தின் தலைமை இயக்குனர் லெப்டினண்ட் ஜெனரல் டாக்டர் எஸ் பி கோச்சர் ஆகியோரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT