Published : 08 Dec 2020 04:54 PM
Last Updated : 08 Dec 2020 04:54 PM

வேகமாக முன்னேற உரிய காலத்தில் 5 ஜி சேவையைத் தொடங்க வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி

உரிய காலத்தில் 5 ஜி தொழில்நுட்ப வசதியைத் தொடங்குவதற்கு நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நடந்த இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020-ல் தொடக்க உரையாற்றினார்.

பங்கேற்பு புதுமை சிந்தனை - புத்திசாலித்தனமான, உத்தரவாதமான, நீடித்த செயல்பாடு என்பது இந்த மாநாட்டின் அடிப்படை விவாதப் பொருளாகும். `தற்சார்பு இந்தியா,' `டிஜிட்டல் பங்கேற்புநிலை' மற்றும் `நீடித்த வளர்ச்சி, தொழில்முனைவோர் முயற்சி & புதுமை சிந்தனை படைப்பு' என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டங்களுக்கு இசைவான செயல்பாடுகளை உருவாக்குவது இதன் நோக்கமாக உள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் புதிய தொழில்நுட்பத் துறைகளுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தொலைத்தொடர்பு சாதனம், வடிவமைப்பு, மேம்படுத்தல் மற்றும் உற்பத்திக்கான மையமாக இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தொழில்நுட்பம் மேம்படும் நிலையில், செல்போன்கள் மற்றும் சாதனங்களை அடிக்கடி மாற்றும் கலாச்சாரம் உருவாகி வருவது குறித்து அவர் எச்சரிக்கை விடுத்தார். மின்னணுக் கழிவுகளை நல்ல முறையில் கையாள்தல் மற்றும் சுழற்சி பொருளாதாரத்தை உருவாக்க பணிக் குழு உருவாக்க முடியுமா என்பது பற்றி பங்கேற்பாளர்கள் யோசிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

எதிர்கால தேவையில் நாம் வேகமாக முன்னேறி, பல மில்லியன் இந்தியர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்காக, உரிய காலத்தில் 5 ஜி தொழில்நுட்ப வசதியைத் தொடங்குவதற்கு நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வரக் கூடிய தொழில்நுட்ப புரட்சியில் மக்களின் வாழ்க்கையை எப்படி மேம்படுத்த முடியும் என்று சிந்தித்து திட்டமிட வேண்டியது முக்கியம் என்று பிரதமர் கூறினார். நல்ல ஆரோக்கியம், நல்ல கல்வி, நல்ல தகவல் மற்றும் விவசாயிகளுக்கான வாய்ப்புகள், சிறு வணிகங்களுக்கு நல்ல சந்தைப்படுத்தல் வசதி ஆகியவை நாம் கவனம் செலுத்த வேண்டிய சில துறைகளாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

தொலைத் தொடர்புத் துறை காரணமாகத்தான் பெருந்தொற்று காலத்திலும், புதுமை சிந்தனை படைப்புகள் முயற்சிகள் காரணமாக உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

உங்களுடைய முயற்சிகள் காரணமாகத்தான், ஒரு நகரில் இருக்கும் மகன், வேறு நகரில் இருக்கும் தாயுடன் தொடர்பு கொள்ள முடிகிறது; ஒரு மாணவர் வகுப்பறைக்குச் செல்லாமலே ஆசிரியரிடம் இருந்து பாடம் கற்க முடிகிறது; ஒரு நோயாளி தன் வீட்டில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெற முடிகிறது; வர்த்தகர் ஒருவர் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நுகர்வோருடன் தொடர்பு கொள்ள முடிகிறது என்று பிரதமர் கூறினார்.

குறியீடு தான் ஒரு பொருளை விசேஷமானதாக ஆக்குகிறது என்று நிறைய இளம் தொழில்நுணுக்க நிபுணர்கள் கூறுகின்றனர்; கான்செப்ட் தான் முக்கியம் என்று சில தொழில்முனைவோர் கூறுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். ஒரு பொருள் உற்பத்தியை அதிகரிக்க மூலதனம் தான் முக்கியம் என முதலீட்டாளர்கள் கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், மன உறுதி தான் மிகவும் முக்கியமானதாக உள்ளது, அதைத்தான் இளைஞர்கள் தங்கள் புதிய உருவாக்கத்தில் காட்டுகின்றனர். சில நேரங்களில் ஒருமித்த நிலைக்கும் லாபகரமான நிலைக்கும் இடையில் உறுதிப்பாடு தான் இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

செல்போன் தொழில்நுட்பம் உள்ள காரணத்தால் தான் நாம் பல மில்லியன் பேருக்கு, பல பில்லியன் டாலர் அளவுக்கான ஆதாயங்களை அளிக்க முடிந்துள்ளது என்றும், இதனால் தான் பெருந்தொற்று காலத்தில் ஏழைகளுக்கும், பிரச்சினையில் சிக்க வாய்ப்புள்ளவர்களுக்கும் நம்மால் உதவிகளை அளிக்க முடிந்தது என்றும் அவர் கூறினார். செல்போன் தொழில்நுட்பம் இருப்பதால் தான் பல பில்லியன் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளைச் செய்ய முடிகிறது, அது பரிவர்த்தனைகளை முறைப்படுத்துபவையாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் ஆக்கச் செய்துள்ளது. செல்போன் தொழில்நுட்பம் காரணமாகத்தான் சுங்கச்சாவடிகளில் மனித உதவிகள் இல்லாத சேவையைப் பெற முடிகிறது என்று அவர் கூறினார்.

செல்போன் உற்பத்தியில் இந்தியா வெற்றிகரமாக முன்னேறி வருவது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். செல்போன் தயாரிப்புக்கு, மிகவும் உகந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது என்றார் அவர். இந்தியாவில் தொலைத்தொடர்பு சாதன உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம். தொலைத்தொடர்பு சாதனம், வடிவமைப்பு, மேம்படுத்தல் மற்றும் உற்பத்திக்கான மையமாக இந்தியாவை நாம் உருவாக்குவோம் என்று பிரதமர் கூறினார். அடுத்த 3 ஆண்டுகளில் எல்லா கிராமங்களிலும் அதிவேக பைபர் ஆப்டிக் தொடர்பு வசதியை ஏற்படுத்தும் திட்டத்தை நாம் அமல் செய்து வருகிறோம்.

இதுபோன்ற தொடர்பை சிறப்பாக செயல்படுத்தக் கூடிய பகுதிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறோம். வளரத் துடிக்கும் மாவட்டங்கள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், வடகிழக்கு மாநிலங்கள், லட்சத்தீவுகள் போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துகிறோம். பிக்சட் லைனில் பிராட்பேண்ட் இணைப்பு தருதல் மற்றும் பொது இட வை-பை ஹாட்ஸ்பாட்களை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம் என்று பிரதமர் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x