Published : 08 Dec 2020 01:16 PM
Last Updated : 08 Dec 2020 01:16 PM
அரசு அதிகாரத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், நம்பகத்தன்மை வாய்ந்த தொலைக்காட்சி நெறியாளர்கள் தாங்கள் பேசும்போது வார்த்தைகளை கவனமாகத் தேர்வுசெய்து, வெறுப்புப் பேச்சுக்குள் சென்றுவிடாமல் பேச சமூகத்துக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சூஃபி துறவி கவாஜா மொய்னுதீன் சிஷ்டிக்கு எதிராக தொலைக்காட்சி நெறியாளர் அமிஷ் தேவ்கன் கடந்த ஜூன் 15-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் அவமதிப்புக்குரிய சொற்களால் பேசினார்.
இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் நெறியாளருக்கு எதிராகக் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்தபோது, இந்த அறிவுரையை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
கடந்த ஜூன் மாதம் நடந்த நிகழ்ச்சியில் தொலைக்காட்சி நெறியாளர் அமிஷ் தேவ்கன், சூஃபி துறவி கவாஜா மொய்னுதீன் சிஷ்டிக்கு எதிராக மதிப்புக்குறைவான வார்த்தைகளைப் பேசியுள்ளார். இதையடுத்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் நெறியாளருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டன.
ஆனால், அந்த நிகழ்ச்சி முடிந்த அன்று இரவு நெறியாளர் தேவ்கன், தான் நா பிறழ் ஏற்பட்டு அந்த வார்த்தையைப் பேசிவிட்டதாகவும் மன்னித்துவிடுமாறும் ட்விட்டரில் கோரியிருந்தார். இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் நெறியாளருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி நெறியாளர் தேவ்கன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை இதற்கு முன் விசாரித்த உச்ச நீதிமன்றம், எந்தவிதமான கடுமையான நடவடிக்கையையும் நெறியாளருக்கு எதிராக எடுக்கக் கூடாது என்று போலீஸாருக்குத் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நெறியாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மிர்னால் பாரதி, “நெறியாளர் தேவ்கன் வேண்டுமென்றே அந்த வார்த்தைகளைப் பேசவில்லை. நா பிறழ் ஏற்பட்டுப் பேசிவிட்டார். அந்த வார்த்தைக்கும் அன்று இரவே மன்னிப்பும் கோரினார். ஆனால், அதன்பின் அவருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல்கள், அவதூறான பேச்சுகள், மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன. அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு ராஜஸ்தான் மாநில அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனிஷ் சிங்வி எதிர்ப்புத் தெரிவித்தார். போலீஸாரா விசாரணையைத் தொடர்வது அவர்களின் உரிமை. அதைத் தடுக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், சஞ்சீவ் கண்ணா 128 பக்கத்தில் தீர்ப்பளித்தனர்.
அதில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில், “நெறியாளர் தேவ்கனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிட முடியாது. மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தையும் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீருக்கு மாற்றி ஒன்றாக விசாரிக்கலாம். விசாரணைக்கு நெறியாளர் ஒத்துழைப்பதைப் பொறுத்து அடுத்தகட்ட தளர்வுகள் தரப்படும்.
அரசு அதிகாரத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தலைவர்கள், நம்பகத்தன்மையான தொலைக்காட்சி நெறியாளர்கள் ஆகியோர் பேச்சு என்பது அதிக தாக்கத்தையும், நம்பகத் தன்மையையும் கொண்டுள்ளது. சாலையில் செல்லும் சாதாரண மனிதர் பேசும் வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட இவர்கள் பேசும் வார்த்தைகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிய வேண்டும்.
வெறுப்புப் பேச்சின் தாக்கம் என்பது பேசுபவரை அடிப்படையாகக் கொண்டது. செல்வாக்குள்ள நபர்கள் தாங்கள் பேசும் வார்த்தைகள் மக்களிடம் அல்லது குறிப்பிட்ட பிரிவு மக்களிடம் சென்றடையும் அளவு, தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, மிகுந்த பொறுப்புடன் பேசுவது அவர்களின் கடமை.
அவர்கள் பேசும் வார்த்தைகள், அல்லது எழுதும் வார்த்தைகளின் பொருளை அறிந்திருப்பார்கள், அது என்ன அர்த்தத்தை வெளிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உயர்ந்தபட்ச தகவல்தொடர்புத் திறனுக்கு அனுபவம் மற்றும் அறிவாற்றலுடன், தகுதியாக இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோபம், உணர்ச்சிகள், தவறான முன்கண்ணோட்டம், தவறான தகவல் ஆகியவற்றால் சாதாரண மனிதர்கள் செயல்படுவதைப் போல் அல்லாமல், செல்வாக்குள்ள நபர்கள், தங்கள் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசும்வாரத்தைகளை கவனமாக வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதுதான்.
வெறுப்புப் பேச்சு ஜனநாயகத்துக்கு சட்டரீதியான எந்த ஒரு வழியிலும் பங்களிப்பு செய்ய முடியாது. உண்மையில் அதுபோன்ற பேச்சு சமத்துவத்தை நிராகரிக்கிறது. அடிப்படைப் பேச்சு சுதந்திரத்துக்கும், குற்றத்துக்குக்குரிய வெறுப்புப் பேச்சுக்கும் வேறுபாடு இருக்கிறது.
அரசின் கொள்கைகளை விமர்சிப்பது பேச்சுரிமை. ஆனால், ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக வெறுப்பைப் பரப்புவது வெறுப்புப் பேச்சு.
தனநபரின் மரியாதை, தேசத்தின் ஒற்றுமை, நம்பகத்தன்மை ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தனிநபர்கள் தங்கள் உரிமையிலும், கடமையிலும் மற்றவர்களுக்கு தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிசெய்ய முடியும்''.
இவ்வாறு நீதிபதி கண்ணா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT