Published : 08 Dec 2020 12:22 PM
Last Updated : 08 Dec 2020 12:22 PM
காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தியின் 74-ம் பிறந்த நாள் நாளை வரும் நிலையில், விவசாயிகளின் போராட்டம் மற்றும் கரோனா பரவல் சூழல் காரணமாக பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் கூறும்போது, ''விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த வருடம் சோனியா தனது பிறந்த நாளைக் கொண்டாட மாட்டார். மத்திய அரசிற்கு எதிரான இப்போராட்டத்தில் விவசாயிகளுடன், சாலைகளிலும் காங்கிரஸார் கைகோத்து நிற்பார்கள்'' எனத் தெரிவித்தார்.
சோனியா காந்தி 1946ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி இத்தாலியில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியை 1968-ம் ஆண்டு மணமுடித்தவர், அவரது மறைவிற்குப் பின் காங்கிரஸில் சேர மறுத்திருந்தார்.
1983ஆம் ஆண்டு வரை இத்தாலி நாட்டவராக இருந்தவர், பிறகு இந்தியக் குடியுரிமை பெற்றார். 1998-ல் அக்கட்சியின் பல மூத்த தலைவர்கள் வற்புறுத்தலின்பேரில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அப்போது முதல் தேசிய அளவிலான பல முக்கியப் பொறுப்புகளை சோனியா காந்தி வகித்து வருகிறார். உத்தரப் பிரதேசம் ராய் பரேலி தொகுதியில் மக்களவை எம்.பி.யாக உள்ளார். இவரின் மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா வத்ரா ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT