Published : 08 Dec 2020 11:38 AM
Last Updated : 08 Dec 2020 11:38 AM
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால், நேற்று டெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதற்குப்பின் நேற்று இரவிலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 13-வது நாளாகத் தொடர்கிறது. விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமுகமான தீர்வும் எட்டப்படவில்லை.
விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி இன்று (8-ம் தேதி) விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு டிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சிவசேனா, திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேலைநிறுத்தத்துக்கு 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் டெல்லி-ஹரியாணா எல்லையான சிங்கு பகுதியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை நேற்று ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின், அரவிந்த் கேஜ்ரிவால் தனது இல்லத்துக்குத் திரும்பியபின் வெளியே வரவில்லை.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பெயரில் வீட்டுக் காவலில் அரவிந்த் கேஜ்ரிவால் வைக்கப்பட்டுள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டுகிறது. மேலும் கேஜ்ரிவால் வீட்டைச் சுற்றி போலீஸார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
வீட்டுக்குள் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த யாரும் செல்ல அனுமதிக்கவில்லை, வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவும் அனுமதிக்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக முதல்வர் கேஜ்ரிவால் பங்கேற்க இருந்த அனைத்து அலுவல்ரீதியான ஆலோசனைக் கூட்டங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகி சவுரவ் பரத்வாஜ் நிருபர்களிடம் கூறுகையில், “முதல்வர் கேஜ்ரிவால் நேற்று விவசாயிகளைச் சந்தித்துவிட்டு வந்தபின், விவசாயிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவு தெரிவித்து அவர்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால், அவர் வீட்டுக்கு வந்தபின், அவர் வீட்டைச் சுற்றி உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பெயரில் போலீஸார் தடுப்புகளை அமைத்து யாரையும் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை, யாரையும் வெளியேறவும் அனுமதிக்கவில்லை.
முதல்வருடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் போலீஸாரால் தாக்கப்பட்டனர். ஆம் ஆத்மி தொண்டர்கள் கேஜ்ரிவால் வீட்டு வாசலில் காத்திருக்கிறார்கள். பாஜக தலைவர்கள் கேஜ்ரிவால் வீட்டு முன் கூடியுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
ஆனால், டெல்லி வடக்கு போலீஸ் துணை ஆணையர் ஆன்டோ அல்போன்ஸ், கேஜ்ரிவால் வீட்டுக் காவலில் இருக்கும் தகவலை மறுக்கிறார். அவர் கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சிக்கும், மற்ற கட்சிகளுக்கும் இடையே மோதல் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் கேஜ்ரிவால் வீட்டுக் காவலில் இல்லை” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT