Last Updated : 07 Dec, 2020 07:48 PM

5  

Published : 07 Dec 2020 07:48 PM
Last Updated : 07 Dec 2020 07:48 PM

‘எதிர்க்கட்சிகளின் வெட்கக்கேடான இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுவிட்டது’- வேளாண் சட்ட எதிர்ப்பு குறித்து ரவிசங்கர் பிரசாத் கடும் சாடல்

டெல்லியில் நிருபர்களுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேட்டி அளித்த காட்சி: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

வேளாண் சட்டங்களின் முக்கிய அம்சங்களுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முன்பு ஆதரவு தெரிவித்துவிட்டு, இப்போது விவசாயிகளின் வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் வெட்கக்கேடான இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுவிட்டது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடுமையாகச் சாடியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள், விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

12-வது நாளாகத் தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமுகமான தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி நாளை (8-ம் தேதி) விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்கு ஏற்கெனவே டிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சிவசேனா, திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேலைநிறுத்தத்துக்கு 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று ஊகடங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''நாட்டு மக்களால் பல்வேறு தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தங்கள் இருப்பை நிலைப்படுத்த, விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து, அவர்களின் பின்னால் நிற்கின்றன.

விவசாயிகளின் ஒரு பிரிவினர், சிலரின் விருப்பத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. எந்தவிதமான அரசியல் கட்சியுடனும் சேராமல் விவசாய அமைப்புகள், சங்கங்கள் தன்னிச்சையாகப் போராட்டம் நடத்துவதை நான் வரவேற்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வாக்குறுதியைப் பார்த்தால், வேளாண் உற்பத்தி சந்தைக் குழுச் சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்து, அனைத்துத் தடைகளில் இருந்தும் வேளாண் வர்த்தகத்தை சுதந்திரமாக்குவதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி ஆண்ட அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுக்கும் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதில், ஏபிஎம்சி சட்டத்திலிருந்து பழங்கள், காய்கறிகளை நீக்கிவிடுங்கள். அவற்றை நேரடியாக வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், வேளாண் துறை அமைச்சராக காங்கிரஸ் அரசில் இருந்தபோது, மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் வேளாண் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார். அதற்கான ஒழுங்குமுறையும், கொள்கையில் மாற்றமும் கொண்டுவரப்பட வேண்டும் என மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

2005-ம் ஆண்டு ஒரு நேர்காணலில் சரத் பவார் அளித்த பேட்டியில், ஏபிஎம்சி சட்டம் அடுத்த 6 மாதங்களில் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். ஏபிஎம்சி சட்டத்தில் மாநில அரசுகள் திருத்தம் கொண்டுவராவிட்டால், மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகள் நிதியுதவி பெற முடியாது. வேளாண் துறையில் தனியார் துறையை அனுமதிக்க வேண்டும் என்றும் சரத் பவார் பேசியிருந்தார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எந்தச் சட்டத்துக்காக முன்பு ஆதரவாகப் பேசினார்களோ அதே சட்டத்தைத்தான் தற்போது மோடி அரசு கொண்டுவந்துள்ளது.

ஆனால், தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸும் ஆட்சியில், அதிகாரத்தில் இருந்தபோது, எந்தச் சட்டத்துக்காக உழைத்தார்களோ, குரல் கொடுத்தார்களோ அந்தச் சட்டத்தை இப்போது எதிர்க்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் வெட்கப்பட வேண்டிய இரட்டை நிலைப்பாட்டு வெளிப்பட்டுவிட்டது.

காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சியில் இருந்தபோது அப்போது இருந்த திட்டக்குழு, ஏபிஎம்சி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ஒப்பந்த முறையிலான விவசாயம் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பரிந்துரைக்கப்பட்டது.

ஆம் ஆத்மி அரசு கடந்த நவம்பரில் புதிய வேளாண் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, இப்போது எதிர்க்கிறது. மத்திய அரசு விவசாயிகளின் வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைத் தொடரச்செய்வதில் உறுதியாக இருக்கிறது.

நவம்பர் மாதம்வரை விவசாயிகளிடம் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான 318 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 202 லட்சம் டன் மட்டும் பஞ்சாப் மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது''.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x