Published : 07 Dec 2020 03:37 PM
Last Updated : 07 Dec 2020 03:37 PM
வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பெரிய தலைவர்கள் பாஜகவில் இன்று யாருமில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று பெருந்தன்மையை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் இன்று தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட விவசாயிகளுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இன்று டெல்லியில் நிலைமை மோசமடைவதற்கு மத்திய அரசுதான் காரணமாக இருந்து வருகிறது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற எந்தக் காரணமும் மத்திய அரசுக்குத் தேவையில்லை. அந்தச் சட்டங்கள் கொடுமையானதாக இருப்பதாக விவசாயிகள் உணர்கிறார்கள். ஆதலால், பெருந்தன்மையுடன் அந்தச் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தைத் தணிப்பதற்கு விவசாயிகள் தலைவர்களாகக் கருதப்படும் சிரோன்மணி அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை மரியாதை நிமித்தமாக அழைத்து இந்தக் கடினமான நேரத்தில் விவசாயிகளுடன் பேசுமாறு கூறியிருக்கலாம்.
ஆனால், இன்று விவசாயிகள் போராட்டம் மோசமான கட்டத்தை நோக்கி நகர்கிறது. இவை அனைத்தும் மத்திய அரசின் பிடிவாதச் செயல்களால் விளைந்தவை.
தேர்தலில் வெற்றி பெற அல்லது வெற்றியை விலைக்கு வாங்கக்கூடிய நபர்களை அரசாங்கம் வைத்திருக்கிறது. ஆனால், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை அல்லது வேலையின்மை பிரச்சினையை எதிர்த்துப் போராடக்கூடிய வல்லுநர்கள் அரசிடம் இல்லை.
இதுபோன்ற கடினமான நேரத்தில், சிக்கலான பிரச்சினைகளையும் தனது சாதுர்யமான பேச்சுத் திறமையால் முடித்துவைக்கும் மூத்த தலைவர்கள் பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் போன்ற தலைவர்கள் பாஜகவில் இல்லை.
இன்றுள்ள பாஜக அரசில் மகாஜன், ஜேட்லி, சுஷ்மா போன்ற பெரிய தலைவர்களில் ஒருவர் கூட இல்லை. இதுவரை 5 சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. அனைத்தும் தோல்வியில்தான் முடிந்துள்ளது''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT